தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரத்தில் மீன் பதன ஆலை விபத்தில் 31 தொழிலாளர்கள் மயக்கம்


தூத்துக்குடி: தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலையில் மின் கசிவு காரணமாக தீவிபத்து நேரிட்டுள்ளது. இதையடுத்து, அமோனியா வாயு சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு, ஆலை முழுவதும் பரவியதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று, தீயை அணைத்தனர்.

இதற்கிடையே, பணியில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 12 பெண்கள், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 2 பெண்கள்,ஒரு தீயணைப்பு வீரர் என 31பேர் மூச்சுத் திணறல் மற்றும் கண்எரிச்சல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். அனைவரும் தூத்துக்குடியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளர் முரளி தலைமையிலான அலுவலர்கள் நேற்று காலை அந்தஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அமைச்சர்கள் கணேசன், பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ சண்முகையா, மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி ஆகியோரும் ஆலையை ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கணேசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புகை மூட்டம் காரணமாக தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேர் சிகிச்சை பெற்று, வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

மீதமுள்ளவர்கள் விரைவில்வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆலையில் அமோனியா வாயு கசிவதற்கான வாய்ப்பில்லை. விபத்து குறித்து ஆய்வு செய்துஅறிக்கை அளிக்குமாறு, தொழிலகப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

x