வங்கதேச வன்முறை: பலி 105 ஆக அதிகரிப்பு: வங்கதேசத்தில், அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் தொடர்பான மாணவர்கள் போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்தனர். 1,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போராட்டம் தீவிரமடைந்த காரணத்தால் வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட ராணுவத்தை அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தால் ஏற்பட்ட வன்முறையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் கண்ணீர் புகைகுண்டு மற்றும் ரப்பர் குண்டை பயன்படுத்தினர். டாக்காவில் வெள்ளிக்கிழமை அனைத்து கூட்டங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டது. இந்த பின்னணியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அங்கிருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களை ஒட்டிய எல்லை வாயிலாகவும் வருகின்றனர். வங்கதேசத்தில் கல்வி பயிலச் சென்ற மாணவர்கள் பெரும்பாலானோர் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மேகாலயா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். வங்கதேசத்தில் மருத்துவம் பயில அவர்கள் அங்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1971-ம் ஆண்டு வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த படைவீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகவே அந்நாட்டு மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு விரைந்து உதவி” -வங்கதேசத்திலுள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிட தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் உத்தரவின் அடிப்படையில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், அங்குள்ள இந்திய தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளை தொடர்பு கொண்டுள்ளது. இந்தியாவிற்குள் -+91 1800 309 3793, வெளிநாடு - +91 80 6900 9900 தொடர்புக்கு -+91 80 6900 9901 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் உறுதி திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தனியார் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த 14 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிட்யூட் பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, கோழிக்கோட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அந்தச் சிறுவன் மாற்றப்பட்டு, அங்கு தனி வாரிடில் சிகிச்சை அளிக்கப்படும். இந்த வைரஸ் பரவல் குறித்து தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்து சாம்பிள் பெறப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.
தூத்துக்குடி மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: தூத்துக்குடி அருகே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் தனியார் மீன்கள் பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மீன்களை பதப்படுத்தி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதி மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அந்த ஆலையில் மின் விபத்து காரணமாக அமோனியா கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மீன் பதனிடும் ஆலை முழுவதும் அமோனியா வாயு பரவியது. இதில், கும்பகோணம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 16 பெண்கள் உட்பட 21 பேருக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த ஆலையின் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடியில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் பெண் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அம்மா உணவகங்கள் - இபிஎஸ் வலியுறுத்தல்: மூடியுள்ள அம்மா உணவகங்களை திறப்பதுடன், அவற்றை முந்தைய ஆட்சியின்போது செயல்பட்டதை போல் முழுமையான பணியாட்களுடன், தரத்துடன் இயக்க நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வந்த நிலையில் மூன்றாண்டுகளில் அதை உயர்த்தாமல், சுமார் 19 அம்மா உணவகங்களை திமுக அரசு மூடியுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, திமுக ஆட்சியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் அம்மா உணவங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்த முதல்வரின் பெருந்தன்மையை பாராட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை என்று சென்னை மேயர் பிரியா விமர்சனம் செய்துள்ளார்.
மைக்ரோசாப்ட் பிரச்சினை: மத்திய அரசு விளக்கம்: “விமான சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது விமானப் போக்குவரத்து சீராக நடந்து வருகிறது” என்று மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப பிரச்சினையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
‘எந்தப் பொறுப்பு வந்தாலும்...’ - உதயநிதி ஸ்டாலின் பேச்சு: “எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருப்போம். எந்தப் பொறுப்பு வந்தாலும் இளைஞரணியை மறக்க மாட்டேன். இளைஞரணி செயலாளர் பதவி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது” என்று திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதை வழிமொழிகிறேன் என்று திருப்பூரில் பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.
இடஒதுக்கீடு கோரி போராட்டம்: ராமதாஸ் எச்சரிக்கை: இடஒதுக்கீடு வேண்டி தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் 7 நாள் சாலைமறியல் போராட்டத்தைவிட தீவிரமாக ஒரு போராட்டம் நடத்தினால்தான் இந்த அரசு பணியும் அல்லது கொடுக்கும் என நம்புகிறோம். இப்போதுள்ள இளைஞர்கள் ஆர்வமாக, துடிப்புடன் உள்ளனர். இவ்வளவு நாள் வஞ்சிக்கப்பட்டது யாரால், எதனால் என்று தெரியாமல் இருந்ததை இப்போது புரிய வைத்துள்ளோம். இளைஞர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே இப்போராட்டம் முந்தைய போராட்டதைவிட கடுமையாக இருக்கும் என, உங்கள் மூலமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெருமிதம்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் 20 ஆண்டு நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அளித்த தீர்ப்புகள் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியது. பசுமையான அமர்வு, அனைத்து அடிப்படை வசதிகள், நவீன வசதிகள் மதுரை அமர்வில் உள்ளன. இளம் வழக்கறிஞர்கள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொண்டுள்ளனர். வருங்காலத்தில் டெல்லி வழக்கறிஞர்கள் மதுரை வழக்கறிஞர்களை தேடும் நிலை ஏற்படும்” என்று பேசினார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு பேரணி: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்தும், நீதி கேட்டும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை கண்டன பேரணி நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் மன்சூர் அலிகான், தினேஷ் உள்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து கண்டன முழுக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், பேரணியில் கலந்துகொண்டவர்கள், ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக செனறனர்.
காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள்: இஸ்ரேலிய ராணுவம் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 54 பேர் காயமடைந்துள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜபாலியாவில் உள்ள வீட்டில் பத்திரிகையாளர் முஹம்மது அபு ஜாசர், அவரது மனைவி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து: பிரதமர் நரேந்திர மோடியை அவரது எக்ஸ் பக்கத்தில் 100.1 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வரும் நிலையில் உலக அளவில் அதிகம் பேர் பின் தொடரும் உலகத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.