சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நீதி கேட்டு, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையில் சென்னை எழும்பூரில் இன்று பேரணி நடைபெற்றது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவரை கடந்த 5ம் தேதி ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு தப்பி ஓடியது. தமிழகம் மட்டுமின்றி, தேசிய அளவிலும் இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதலில் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் மேலும் 3 பேரை காவல் துறை கைது செய்தது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் போலீஸ் விசாரணையில் இருந்த திருவேங்கடம் என்பவர் அண்மையில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்ந்து பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை என்ற பெண் ரவுடியையும் போலீஸார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்னதாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சமூக வலைதளம் மூலம் திமுக அரசுக்கு, திரைப்பட இயக்குநரும், நீலம் பண்பாட்டு மைய இயக்குநருமான பா.ரஞ்சித் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். சமூக வலைதளங்களில் அவரது கேள்விகள் பெரும் விவாதத்தை எழுப்பியது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கேட்டு ஜூலை 20ம் தேதி நீலம் பண்பாட்டு மையம் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என பா.ரஞ்சித் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை எழும்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் பா.ரஞ்சித் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நடிகர்கள் மன்சூர் அலிகான், நடிகர் அட்டகத்தி தினேஷ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இதேபோல், தலித் அமைப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணியையொட்டி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.