கல்குவாரியை கண்டித்து சாலை மறியல்: திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு


பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும் அதிகாரிகள்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாசத்திரம் அருகே செயல் பட்டு வரும் தனியார் கல்குவாரியை கண்டித்து, பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அம்மாசத்திரம் அருகே உள்ள கோப்புலிக்காட்டில் தனியார் கல்குவாரி ஒன்று, கடந்த 17 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் இருந்து வெள்யேறும் மாசு மற்றும் எந்திரங்களின் இரைச்சல் காரணமாக சுற்றுவட்டாரத்தின் கிராம மக்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள். இங்கு வைக்கப்படும் வெடியால் சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. வீடுகளில் வசிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதனால் இந்த கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மக்களின் கோரிக்கையை எவரும் செவிமெடுக்காததில் ஆவேசம் அடைந்த மக்கள், இன்று திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அம்மாசத்திரம் விளக்கு அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊழல் ஒழிப்பு பாசறையின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்த தகவல் அறிந்து இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தைசாமி மற்றும் கீரனூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் குழு அமைத்து விசாரணை செய்வதன் மூலம் கல்குவாரியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் காரணமாக திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

x