திருநெல்வேலி / தென்காசி / கோவில்பட்டி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையில் 45 மி.மீ. மழை பதிவானது.
பாபநாசத்தில் 38 மி.மீ., நாலுமுக்கு பகுதியில் 33, ஊத்து பகுதியில் 28, ராதாபுரத்தில் 19,காக்காச்சி பகுதியில் 14, நம்பியாறு அணையில் 10, சேர்வலாறு, மாஞ்சோலையில் தலா 7, களக்காட்டில் 3.20 மி.மீ. மழை பதிவானது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 475 கனஅடி நீர் வந்தது. 256 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 51.25 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 105 கனஅடி நீர் வந்தது. 245 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் 85.53 அடியாக இருந்தது.
தென்காசி மாவட்டம், கருப்பாநதி அணையில் 36 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 25 மி.மீ., அடவிநயினார் அணையில் 13, தென்காசியில் 7.40, ராமநதி அணையில் 6, கடனாநதி அணையில் 4, குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. கீழப்பாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றது. தேங்கிய நீரைவடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். குற்றாலம் அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் விழுந்தது. கனமழை எச்சரிக்கை காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.
இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. மே மாத தொடக்கத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக காற்றின் வேகம் குறைந்து கோடை மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் காற்று வீசத் தொடங்கியது. விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று மாலை 3.15 மணிமுதல் மழை பெய்யத் தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் தண்ணீர் அதிகமாகி வாகனங்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது என, இளையரசனேந்தல் சாலையில் சுரங்கப் பாதையின் இருபுறமும் போக்குவரத்துக்கு போலீஸார் தடை விதித்து, பேரிகார்டுகளை வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது.