போயஸ்கார்டனில் இருந்தாலும், கோடநாட்டில் இருந்தாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது திமுகவை கண்டித்து ஜெயலலிதாவிடமிருந்து தினம் ஒரு அறிக்கையாவது வெளியாகும். ஏதாவதொரு போராட்டக் களத்தை அதிமுகவினருக்கு அமைத்துக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவர்களும் ஆள், அம்பு, சேனை திரட்டி உற்சாகமாக போராட்டத்தில் பங்கெடுப்பார்கள். அந்தளவுக்கு, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தமிழக அரசியலை தனது கண்ணசைவிலேயே வைத்திருந்தார் ஜெயலலிதா!
ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என அதிமுக தொண்டர்கள் நாலா திசையிலும் சிதறிக்கிடக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் திமுகவை எதிர்ப்பதைவிட தங்களுக்குள் யார் கை ஓங்கியிருக்கிறது; டெல்லியில் யாருக்கு செல்வாக்கு என்பதை நிரூபிப்பதே இப்போது பெரிய வேலையாக இருக்கிறது. அதனால் அம்மா விசுவாசிகள் எல்லாம் போராட்டக் களத்தையே மறந்துபோனார்கள்.
வெளித் தோற்றத்தில் பார்த்தால் ஈபிஎஸ் பக்கம் பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள் நிற்கின்றனர். ஆனால், தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக ஓபிஎஸ்ஸும் அதிமுகவை தன்னால்தான் மீட்கமுடியும் என சசிகலாவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஊடாக, டிடிவி தினகரனின் அமமுகவையும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஈபிஎஸ்ஸுக்கு இருக்கிறது.
இந்த சிக்கல்களை எல்லாம் சமாளித்து இருப்பை தக்கவைப்பதே பெரிய வேலையாக இருப்பதால் தான் கைவசம் 66 எம்எல்ஏ-க்கள் இருந்தும், நான்கே நான்கு எம்எல்ஏ-க்களை மட்டுமே வைத்திருக்கும் பாஜக செய்யும் எதிர்க்கட்சி அரசியலைக்கூட அதிமுகவால் செய்யமுடியவில்லை. அதேசமயம், தங்களுடைய இடத்தில் இருந்து பாஜக ஸ்கோர் செய்வதையும் அந்தக் கட்சியால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. தங்களின் பிடி டெல்லியில் இருப்பதால் இதை வெளிப்படையாக விமர்சிக்கவும் முடியாமல் இருந்த ஈபிஎஸ் அதிமுகவுக்கு, இப்போது கொஞ்சம் நிம்மதியும் தெம்பும் வந்திருக்கிறது. காரணம், தமிழக பாஜகவுக்குள் குழாயடி சண்டை கணக்காய் கும்மியடிக்க ஆரம்பித்திருக்கும் குடுமிபிடி சண்டைகள்!
அண்மையில், பாஜக ஓபிசி அணி மாநில தலைவர் டெய்சி சரணுக்கும், திருச்சி சூர்யா சிவாவுக்கும் இடையிலான உரையாடல் குறித்த ஆடியோ வெளியாகி பாஜகவுக்குள் பிரளயத்தை வெடிக்கவைத்தது. இதையடுத்து, இருவருமே சமரசமாகி பின் வாங்கினாலும், சூர்யாவை 6 மாதங்களுக்கு கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலக்கிவைப்பதாக அறிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. இந்த விஷயத்தில் கட்சிக்குள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தப்பட்ட தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், ‘நான் பாஜகவை விட்டே விலகுகிறேன்’ என ட்விட் செய்தார் சூர்யா. இருந்தும் இவரது ராஜினாமா கடிதத்தை இன்னமும் ஏற்காமல் வைத்திருக்கிறது பாஜக தலைமை. இந்த விஷயத்தில் டெய்சியும் அத்தனை நிம்மதியாக இல்லை. இதைத் தெரிந்துகொண்டு திமுக தரப்பில் ஹெலன் டேவிட்சன் மூலமாக அவருக்கு தூது அனுப்பி இருக்கிறார் கனிமொழி.
இதேபோல், கட்சிக்கு களங்கம் உண்டாக்கியதாக நடிகை காயத்ரி ரகுராமையும் பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்தார் அண்ணாமலை. இந்த நடவடிக்கைகளின் பின்னணியிலும் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வதன் பின்னணியிலும் பாஜகவின் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகனுக்கும் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே பனிப்போர் தகிக்கிறது.
பாஜகவுக்குள் நடக்கும் இந்த உட்கட்சி மோதல்களை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னையும் தன் கையில் இருக்கும் அதிமுகவையும் முன்னிலைப்படுத்த திடீர் வேகம்காட்டுகிறார் ஈபிஎஸ். அதற்காகவே, திமுக அரசைக் கண்டிக்கும் அதிமுகவின் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளார். பேரூராட்சி, ஒன்றியம், நகரம்,மாநகரம் என்னும் அளவில் இப்போது சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து போராட்டங்களை நடத்துகின்றனர் அதிமுகவினர். புயல் காரணமாக சில மாவட்டங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள போராட்டங்கள் புயல் கரை கடந்ததும் புது வேகமெடுக்கும் என்கிறார்கள்.
அண்மையில், டெல்லியில் நடைபெற்ற ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு அதிமுக பிரதிநிதியாக மத்திய அரசு தன்னை அழைத்ததை நல்ல சமிக்ஞையாகப் பார்க்கிறார் ஈபிஎஸ். இதன் மூலம் மோடி - அமித்ஷா கூட்டணியின் ஆதரவு தனக்குத் தான் என்பதை உள்வாங்கி இருக்கும் ஈபிஎஸ், அதே உற்சாகத்துடன் தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த முடிவெடுத்திருப்பதாக அதிமுக வட்டத்தில் சொல்கிறார்கள். எனினும் ஜெயலலிதாவின் காலத்தைப் போல் உத்தரவிட்டதும் உடனடியாக களத்துக்கு வரும் நிலையில் இப்போது அதிமுக இல்லை என்பதை உணர்ந்திருக்கும் ஈபிஎஸ், தலைமையின் உத்தரவுக்கோ அனுமதிக்கோ காத்திருக்காமல் அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் மக்கள் பிரச்சினைகளை கையிலெடுத்து போராட்டங்களை முன்னெடுக்கும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு கோடிட்டிருக்கிறாராம்.
போராட்டங்களுக்கு மத்தியில் பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் அதிமுகவை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான யோசனைகளையும் அதிமுக நிர்வாகிகளுக்கு அருளி இருக்கிறாராம் ஈபிஎஸ். இதற்காகவே, இத்தனை நாளும் கவனிக்கப்படாமல் இருந்த கட்சியின் ஸ்டார் பேச்சாளர்களுக்கு தீபாவளி கிஃப்ட்டாக 10 ஆயிரம் ரூபாய் அளிக்கப்பட்டதாம். திமுக, பாஜக ஐடி விங்குகளைப் போலவே அதிமுக ஐடி விங்கும் இப்போது கூடுதல் சுறுசுறுப்பு காட்டுகிறது. சட்டமன்றத் தொகுதி வாரியாக ஏற்கெனவே தேர்தல் சமயத்தில் அமைக்கப்பட்ட அதிமுக வாட்ஸ் அப் குழுக்களில் பெரும்பாலான குழுக்களில் இப்போது ஓபிஎஸ் புகழை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றி, புதிதாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 250 அதிமுக வாட்ஸ் அப் குழுக்களை தொடங்கி அதன் வழியாக திமுக அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை வேகப்படுத்தவும் ஐடி விங்கிற்கு ஆலோசனை தந்திருக்கிறாராம் ஈபிஎஸ்.
அண்மையில் கோவையில் திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஏற்பாடு செய்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஈபிஎஸ்ஸே நேரில் வந்து தொடக்கிவைத்தார். அந்தப் போராட்டத்தில், ‘ஆளும் திமுக கோவை மாவட்டத்தைப் புறக்கணிக்கிறது’ என்பதே பிரதான கோஷமாக எழுப்பப்பட்டது. இதே பாணியில் நெல்லை, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் என தமிழகத்தை மண்டல வாரியாகப் பிரித்து அந்தந்த பகுதிசார் பிரச்சினைகளுக்காகப் போராட்டம் நடத்தவும் முன்னாள் அமைச்சர்களை அறிவுறுத்தி இருக்கிறாராம் ஈபிஎஸ். தேவை ஏற்படும் இடங்களுக்கு, தானே நேரடியாக வருவதாகவும் உறுதி சொல்லியிருக்கிறாராம்.
அதிமுக போடும் கணக்கு!
பால் விலை உயர்வு தொடங்கி மின் கட்டண உயர்வு வரை நேரடியாகவே திமுக ஆட்சியில் பல விஷயங்கள் மக்களைப் பாதித்து வருகிறது. ஆக இப்போதைய சூழலில், கூட்டணி பலத்தைத் தாண்டி அரசின் சாதனைகளாகச் சொல்ல திமுகவுக்கு பெரிதாக எதுவும் இல்லை. இதை எல்லாம் மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லி ஜெயலலிதா பாணியில் மக்களவைத் தேர்தல் வரை தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதே ஈபிஎஸ் கணக்கு என்கிறார்கள்.
இது தொடர்பாக தனக்கு நெருக்கமான சீனியர்களிடன் அண்மையில் வெளிப்படையாகவே பேசிய ஈபிஎஸ், “அடுத்தும் பாஜக தான் மத்தியில் ஆட்சிக்கு வரப்போகிறது. நமது இலக்கு நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதுதான். அதற்குள் கட்சியை முழுமையாக நமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். கழக நிர்வாகிகள் நம் பக்கம் இருந்தாலும் தொடர் போராட்டங்களை நடத்துவதன் மூலம் தான் மக்கள் மத்தியில் நாம் தான் பொறுப்பான எதிர்க்கட்சி என்பதை நிலைநிறுத்த முடியும். அதன் மூலம் தான் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களையும் நம் பக்கம் திரட்ட முடியும்” என்று சொன்னாராம்.
ஆளுக்கு கொஞ்சமாக அதிமுகவை பங்குவைத்துக் கொண்டு நிற்கும் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டவர்களைக் கடந்து முன்னேறத் துடிக்கும் ஈபிஎஸ்ஸின் இந்த வியூகங்கள் எல்லாம் பலிக்குமா? ஜெயலலிதா கால எதிர்கட்சியாக ஈபிஎஸ் தலைமையிலான அதிமுக மக்கள் மன்றத்தில் தனக்கான இடத்தைத் தக்கவைக்குமா என்பதை இனிவரும் நாட்களே தீர்மானிக்கும்.