கடந்த வாரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பாதை திறப்புவிழா நடைபெற்றது. அங்கு மூத்த அமைச்சர்களும் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் இருக்க, சேப்பாக்கம் எம்எல்ஏ-வான உதயநிதியே பாதையை திறந்து வைக்கிறார். இது ஒரு சின்ன உதாரணம்தான். தமிழகம் முழுவதும் துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அருகிலிருந்தாலும் உதயநிதியே நலத்திட்டங்களை துவக்கி வைப்பது, கட்டிடங்களை திறந்து வைப்பது என முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
பொதுவாக அமைச்சர்களுக்கு மேல் ஒருவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றால் அது முதல்வராகத்தான் இருக்க முடியும். அப்படி முதல்வருக்கு இணையாக இன்னொரு சூப்பர் முதல்வராக திமுகவினரால் முன்னிலைப்படுத்தப்படுகிறார் உதயநிதி ஸ்டாலின். கடந்த மாதத்தில் கடந்த அவரது பிறந்தநாளை, கருணாநிதியின் பிறந்தநாள் அளவிற்கு திமுகவினர் பிரம்மாண்டமாகக் கொண்டாடினார்கள். மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தங்கள் மாவட்டத்தில், ‘சின்னவர் பிறந்த நாள் விழா’ என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், அன்னதானம் செய்தும் அசத்தினார்கள். தொலைக்காட்சிகளில் அந்தந்த மாவட்டங்களின் சார்பில் பிறந்தநாள் தெரிவித்தும், நாளிதழ்களில், வார இதழ்களில் வாழ்த்து விளம்பரங்கள் அளித்தும் உதயநிதி பிறந்தநாளை கடமையே கண்ணாகக் கொண்டாடினார்கள்.
இப்படி முதல்வர் ஸ்டாலினுக்கு இணையாக உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், சூப்பர் முதல்வராகவே முன்னிலைப்படுத்தப்பட்டுவரும் அவருக்கு சீக்கிரமே அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தடதடக்கின்றன. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்படலாம் அல்லது அவருக்காகவே புதிய துறை உருவாக்கப்படலாம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
இந்த விஷயத்தில் திமுகவினர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் திமுக தலைமை திட்டமிட்டு உளவியல் ரீதியாக ஒரு கருத்தை கெட்டிக்காரத்தனமாக திணித்திருக்கிறது என்று சொல்லலாம். சமூக வலைதளங்களில் ‘டிசம்பர் மாதம் 14-ல் உதயநிதி அமைச்சராகிறார்’ என்கிற தகவல்களை பரவவிட்டு, உதயநிதி அமைச்சராக்கப்பட்டால் அது மக்கள் மத்தியில் எவ்வித விமர்சனத்தையும் ஏற்படுத்தாத அளவுக்கு உறுத்தல்கள் ஏற்படா வண்ணம் அந்த உளவியல் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.
2019 மக்களவைத் தேர்தலில் ஒரு விளையாட்டுப் பிள்ளைபோல வலம்வந்த உதயநிதி... 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சிக்கான ஒரு இளம்தலைவராக வெளிக்காட்டப்பட்ட உதயநிதி... தற்போது துணை முதல்வராக பதவி ஏற்கவேண்டும் என்கிற கோரிக்கையோடு இரண்டாம்கட்ட தலைவராக வலம் வருகிறார்.
முதலில் ஸ்டாலின் நடைபயணத்தில் உதயாவை வெறுமனே பின்னால் நடக்க வைத்தார்கள். அதன்பின்னர் இரண்டு தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கழகத்தின் வெற்றிக்காக கண்துஞ்சாது உழைத்தவர் என்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். அவர் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக வரவேண்டும் என்று பலரையும் குரல் கொடுக்க வைத்து மாவட்ட செயலாளர்கள் வழியாக தீர்மானங்களை நிறைவேற்ற வைத்தார்கள். சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பளித்து எம்எல்ஏ-வாகவும் ஆக்கினார்கள். தேர்தலில் வெற்றிபெற்றதுமே அமைச்சர் பதவி என்கிற பேச்சையும் மெதுவாக கிளப்பினார்கள்.
ஆனாலும் அப்போது ராஜதந்திரமாக உதயநிதிக்கு அமைச்சர் பொறுப்பை வழங்கவில்லை. ஏன் அவருக்கு வழங்கப்படவில்லை என்பதான கேள்வி மக்கள் மனதில் எழுந்தது. அடுத்ததாக, இலாகா மாற்றம் ஒரே ஒருமுறை நடைபெற்றது. அப்போதும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சு எழுந்தது. அப்போதும் அது நடக்கவில்லை. அடுத்ததாக, கட்சி நிகழ்ச்சிகளில் சாதாரண தொண்டனாக கலந்துகொள்ள வைத்தார்கள். பிறகு அரசு விழாக்களில் அவருக்கான முக்கியத்துவத்தை அதிகரித்தார்கள். இப்படியே அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால்தான் என்ன? என்று எல்லோரையும் நினைக்க வைத்த பின்னர் இப்போது நிச்சயமாக வழங்க முடிவு செய்திருக்கிறார்கள். இப்போது அவரை அமைச்சராக்கினால், “இது ஏற்கெனவே எதிர்பார்த்தது தானே” என்ற ரியாக்ஷன் மட்டுமே மக்கள் மத்தியில் எதிரொலிக்கும்.
உதயநிதியின் ஆத்ம நண்பரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் தொடங்கி அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, மூர்த்தி என மூத்தவர்கள் வரை உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். துணை முதல்வராக அவர் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் அமைச்சர் பொன்முடியின் மகனும் எம்பி-யுமான கௌதமசிகாமணி. திமுகவைத் தாண்டி காங்கிரஸ் கட்சியில் இருந்தும்கூட உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க சிபாரிசு செய்கிறார்கள். இப்படி எல்லா தரப்பிலும் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை எழவைத்து எதிர்ப்பின்றி, எதிர்பார்ப்பை எகிறவைத்து அவரை அமைச்சராக்க திட்டமிட்டார்கள். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், “இப்போதே சூப்பர் முதல்வராக திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு தனியாக அமைச்சர் பதவி எதற்கு?” என்ற கேள்வியும் சிலரால் எழுப்பப்படுகிறது. வெறுமனே எம்எல்ஏ-வாக இருக்கும்போதே சின்னவருக்கு வாழ்த்தோ, வணக்கமோ தெரிவிக்காமல் எந்த அமைச்சரும் பேசுவது கிடையாது. எந்த எம்எல்ஏ-வும் சின்னவரின் எண்ணத்துக்கு விரோதமாக எதையும் நகர்த்துவது கிடையாது. அப்படி ஒரு அதிகாரம் மிக்க இடத்தில் இருக்கும்போது அமைச்சர் பொறுப்பும் இருந்தால் தான், ‘எம்எல்ஏ-வாக இருக்கும் இவருக்கு எதற்கு இவ்வளவு முக்கியத்துவம்?’ என்ற கேள்வி எழாது என்பதால் உதயநிதி அமைச்சரவைக்குள்ளும் கொண்டுவரப்படுகிறார். மேலும், அதிகார அரசியலில் உதயநிதியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவதற்கும் இது அவசியப்படுகிறது.
ஆகா, திமுகவில் வேறு யாருமே இல்லையா என்ற கேள்வியே எழாத வகையிலும், அவருக்கு கொடுத்தால் என்ன தவறு என்று நியாயம் கேட்கும் வகையிலும் உளவியல் ரீதியாக பொதுத்தளத்தை தயார்படுத்தி வைத்துவிட்டது திமுக தலைமை. அடுத்ததாக இந்த ஆட்சியின் இறுதிக்குள் உதயநிதிக்கு துணை முதல்வராகவும் பட்டம் சூட்டும் வாய்ப்பும் இருக்கிறது. மொத்தத்தில், கட்சியின் அடுத்த தலைவராக அவர் அனைவராலும் இப்போதே இயல்பாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டார் என்கிறார்கள்.
இதுகுறித்து உதயநிதியின் உற்ற நண்பரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் பேசினோம். ‘’உதயநிதியின் மீதுள்ள அன்பினாலும், அவருடைய செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டும் அமைச்சர்களும், கட்சிக்காரர்களும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆற்றல் மிக்கவரான அவர் அமைச்சர் ஆக்கப்படுவார் என்று அனைவரையும் போலவே நானும் விரும்புகிறேன். அது நடக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நான் மட்டுமல்ல... கட்சியின் மூத்தத் தலைவர்கள், அமைச்சர்கள் அனைவருமே அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் தொகுதிக்கு ஆற்றும் செயல்பாடுகள் அந்த அளவிற்கு இருக்கிறது. அத்தகைய செயல்பாடுகள் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அதற்குக் காரணம்.
என்னைப் போல பல புதியவர்களுக்கு தற்போது அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதியவரான உதயநிதிக்கு வாய்ப்பு வழங்கினால் மட்டும் குற்றமா? அவரின் தீவிரமான செயல்பாடுகளாலும் கட்சிக்கு அவர் கடமையாற்றும் விதத்தாலும் தான் அவரை அனைவரும் கொண்டாடுகிறார்கள்; அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கலாம் என்று பேசுகிறார்களே தவிர அவர் இன்னாரின் பிள்ளை என்பதால் அல்ல. அதுமட்டுமில்லாமல் ஒருவரின் தகுதியை யாராலும் புறக்கணிக்கணித்து விட முடியாது” என்றார் அன்பில் குடும்பத்து வாரிசு.
உதயநிதியை பொறுத்தவரை எவ்வித சிக்கலும் இல்லாமல் கட்சிக்கும், ஆட்சிக்கும் அடுத்த வாரிசாக நிலைநிறுத்தப்பட்டு விட்டார். ஆனால் திமுக உதயமான காலந்தொட்டு கட்சிக்காக உழைத்த லட்சக்கணக்கானோரின் வாரிசுகள் எந்தவித அங்கீகாரத்தையும் அடைய முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் படுவேகமாக மேலே கொண்டுவரப்பட்டுள்ள உதயநிதியை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுவிட்டார்களா... அல்லது கட்டாயத்தின் பேரில் கைதூக்குகிறார்களா என்பது போகப்போகத்தான் தெரியவரும்!