திருவள்ளூர்: 300க்கும் மேற்பட்ட ஆதரவற்ற விலங்குகளுக்கு ஆதரவளிக்கும் சரணாலயம்!


சென்னை: 22 வயதான சாய் விக்னேஷ் நிறுவியுள்ள அல்மைட்டி விலங்குகள் நல அறக்கட்டளை, தமிழ்நாடு முழுதும் ஆதரவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு ஆதரவு வழங்கிவருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மிலாப் அறக்கட்டளையின் ஆதரவுடன் 22 வயதான சாய் விக்னேஷ் என்பவரால் நிறுவப்பட்ட இந்த சரணாலயம் பசுக்கள், நாய்கள், ஆடுகள், கோழிகள், பன்றிகள், குதிரைகள், முயல்கள் மற்றும் கழுதைகள் உட்பட 320 க்கும் மேற்பட்ட ஆதரவற்ற விலங்குகளுக்கு புகலிடமாக உள்ளது.

சிறுவயதில் வளர்த்த செல்ல பிராணியை புற்றுநோயால் இழந்த கவலையில் இருந்து மீண்டு வர அவரது குடும்பத்தினர் அளித்த ஆதரவு, இவ்வாறு தெருநாய்களைப் பராமரிப்பதற்கும், விலங்குகள் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவருக்கு ஊக்கமளித்தது. 2015 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட பல விலங்குகளுக்கு சாய் விக்னேஷ் அடைக்கலம் கொடுத்ததன் மூலம் இந்த சேவைகளைத் துவங்கினார்.

அவருக்கு நிதி மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவாக இருந்த அவரது தாத்தா காலமான பிறகு, சாய் தனது வீட்டை விற்று, திருவள்ளூரில் உள்ள பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் எட்டு ஏக்கர் நிலத்தை வாங்கி இந்த சரணாலயத்தை நிறுவினார்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு அப்பால், துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத கடத்தல் வழக்குகளை உள்ளூர் அதிகாரிகளிடம் புகாரளிப்பதன் மூலம் விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சாய் விக்னேஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு விலங்கு வதை சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துகிறார். 2021 முதல், குறிப்பாக கிராமப்புறங்களில் பெரும்பாலும் விழிப்புணர்வு குறைவாக உள்ள பகுதிகளைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான அதிகாரிகளை அவர் சந்தித்து இது குறித்து விளக்கியுள்ளார்.

சட்டவிரோத கடத்தலில் இருந்து விலங்குகளை, குறிப்பாக மாடுகள் மற்றும் நாய்களை மீட்பதற்காக சாய் விக்னேஷ் தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "சட்டவிரோத கடத்தலில் இருந்து நான் பல விலங்குகளை மீட்டுள்ளேன். இவ்வாறு எங்களால் மீட்கப்பட்ட பல விலங்குகளின் கண்களில் பச்சை மிளகாயை திணிப்பது, அந்தரங்க உறுப்புகள் சேதம் போன்ற பலவகையான இன்னல்களை அனுபவித்துள்ளன. எங்களது சரணாலயம் சமூக ஆதரவை பெரிதும் நம்பியுள்ளது. துன்பத்தில் உள்ள விலங்குகளைப் பாதுகாப்பதற்காக பொதுமக்கள் சமூக ஊடகங்கள் மூலம் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள்.

மேலும், தன்னார்வலர்கள் பலர் மீட்பு பணிகளுக்கு உதவுகிறார்கள். ஒவ்வொரு நாளும், கால்நடைகளுக்கு உணவளிக்கவும், பராமரிக்கவும் சுமார் 18,000 ரூபாய் வரை செலவாகிறது. எனவே இந்த சரணாலயத்தைத் தொடர்ந்து நாங்கள் நடத்தி வருவதில் பொதுமக்களின் பங்களிப்புகள் இன்றியமையாதவை. மக்களின் ஆதரவுடன் பாதிக்கப்பட்ட மேலும் பல விலங்குகளை பாதுகாத்து, அவற்றுக்கான தனிப்பட்ட தங்குமிடங்களை உருவாக்கவும், சத்தான உணவை வழங்கவும், மென்மையான அன்பான கவனிப்புடன் கூடுதலாக மருத்துவ வசதிகளை எங்களால் வழங்கவும் முடியும்” என்று கூறினார்.

சரணாலயத்தின் மாதாந்திர செலவுகள் தோராயமாக ரூ. 8 லட்சம் ஆகும். பொதுமக்களிடம் இருந்து வாங்கிய நன்கொடைகள் மற்றும் கடன் வாங்கிய பணம் மூலம் இந்த சரணாலயத்தை நிர்வகித்து வரும் சாய், தற்போது 35 லட்சம் ரூபாய் கடனில் உள்ளார். மேலும் வலைதள வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் அவர், தனது பங்களிப்பாக மாதந்தோறும் 50,000 ரூபாயை இச்சரணாலயத்திற்கு வழங்கி வருகிறார். சரணாலயத்திற்கு பங்களிப்பதன் மூலமும், விலங்குகளை கொடுமையிலிருந்து பாதுகாக்கும் தங்கள் பணியை ஆதரிக்குமாறு பொதுமக்களுக்கு மிலாப் மற்றும் அல்மைட்டி விலங்குகள் நல அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

x