சென்னை: அம்மா உணவகம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கண்டன்ம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பட்டையில் அம்மா உணவகத்தின் செயல்பாடுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவுக்கூடம், உணவருந்த வந்தவர்கள், அங்கு பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோரிடம் அம்மா உணவக செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இந்நிலையில், அம்மா உணவகத்தில் முதல் ஆய்வு செய்தது தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
அதில், “அம்மா உணவகத்தில் நேற்று ஆய்வு செய்ததுபோல் கடந்த 3 ஆண்டுகளில் அதிகாரிகளோ, திமுக அமைச்சர்களோ எத்தனை முறை உணவின் தரத்தை சோதித்தனர்? முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டு தரமான உணவு தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்வதுபோல் முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். அதிமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் இருந்த நிலையில் அவற்றில் சுமார் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
எனவே மூடிய அம்மா உணவகங்களை திறப்பதுடன், முழுமையான பணியாட்களுடன் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த ட்வீட் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இதற்கு பதில் தெரிவித்து ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார்.
அதில், “முதலமைச்சரின் பெருந்தன்மையை பாராட்ட எடப்பாடி பழனிசாமிக்கு மனமில்லை. திமுக அரசால் தொடங்கப்பட்டது என்பதற்காகவே புதிய தலைமைச் செயலகம் உட்பட அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் எத்தனை எத்தனை என்பதை மக்கள் அறிவர். அதனைப் பற்றி கொஞ்சமும் கூச்சமின்றி பொறாமையிலும் ஆற்றாமையிலும் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பித் தவிக்கிறார்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேயர் பிரியாவின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. இதனிடையே, அம்மா உணவகத்தில் உணவை ருசி பார்த்த முதல்வர் ஸ்டாலின், தனது எச்சில் கைகளை சாப்பாட்டு பாத்திரத்திலேயே உதறும் வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.