ஏமாற்றி எழுதி வாங்கிய வீடு: மகளிடமிருந்து மீட்டுத் தர வயதான தம்பதி வலியுறுத்தல்


கும்பகோணம்: தங்களிடமிருந்து மகள் ஏமாற்றி எழுதி வாங்கிய வீட்டை மீட்டுத் தரவேண்டும் என ஓர் வயதான தம்பதி அதிகாரிகளுக்கு மனு மீது மனுவாக அனுப்பிக் கொண்டுள்ளனர்.

திருவிடைமருதூர் வட்டம், திருக்கோடிக்காவலைச் சேர்ந்தவர் விவசாயி பன்னீர்செல்வம் (70). இவரது மனைவி சகுந்தலா (68). ஒரு மகன் ஒரு மகள் என இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். இதில், திருமணமான மகன் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டார். மகள் விமலாதேவி, காதல் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் குணதலைபாடியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரித்துக் கொள்வதாகக் கூறி பன்னீர்செல்வத்தின் மகள் விமலாதேவி, தந்தைக்குச் சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டைக் கடந்தாண்டு நவம்பரில் இனாம் செட்டில்மென்ட் மூலம் தன் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

பெற்றோரிடம் இருந்து வீட்டை தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்ட விமலாதேவி, அதன் பிறகு அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கிறார். அத்துடன், அவர்கள் வாழ்ந்த வீட்டை விட்டும் அவர்களை வெளியேற்றி இருக்கிறார். இதனால் தற்போது கும்பகோணம் வட்டம், கொரநாட்டூக்கரூப்பூரில் வாடகை வீட்டில் வசிக்கும் இருவரும் வறுமையில் வாடி வருகின்றனர்.

தங்களை ஏமாற்றி மகள் அபகரித்துக் கொண்ட தங்களது வீட்டை மீட்டுத் தருமாறு, கடந்த பல மாதங்களாக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பி இருக்கிறார்கள் இந்தத் தம்பதி. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய பன்னீர்செல்வம், “எனது மகன் விபத்தில் இறந்ததுமே எங்களுக்கு வேண்டிய தேவைகள் உள்ளிட்டவற்றை வழங்கி, நல்லபடியாக எங்களைப் பார்த்துக் கொள்வதாகக் கூறி எங்களை ஏமாற்றி எனது மகள் விமலாதேவி, சொத்துகளை எழுதி வாங்கிக்கொண்டார். சொத்துகள் அவரது கைக்கு மாறிய சில நாட்களிலேயே எங்களை அடித்துத் துன்புறுத்தி, சரியானபடிக்கு உணவு வழங்காமல் அறைக்குள் பூட்டி தாழிட்டு கொடுமைப்படுத்தினார். இதையெல்லாம் பார்த்துவிட்டு அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தான் எங்களை மீட்டு வெளியில் அனுப்பி வைத்தனர்.

தற்போது கொரநாட்டுக்கரூப்பூரில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள், மிகவும் வறுமையில் உள்ளோம். சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத நிலையில் வீட்டு வாடகை கொடுக்கமுடியாமல் ரொம்பவே சிரமப்படுகிறோம். கையில் இருந்த சொத்துகளை மகள் தானே என நம்பிக் கொடுத்துவிட்டு இந்த வயதில் நான் செக்ரியூட்டி வேலைக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன். அந்த வருமானத்தை வைத்துத்தான் நாங்கள் இருவரும் அரை வயிற்றுக் கஞ்சியாவது குடித்து வருகிறோம்.

எங்களின் இந்த நிலை குறித்தும், மகளிடமிருந்து எங்களது வீட்டை மீட்டுத் தரக் கோரியும் கலெக்டர் தொடங்கி அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்துவிட்டோம். எந்த மனுவுக்கும் பதில் இல்லை. இனியும் எங்களது வீட்டை மகளிடமிருந்து மீட்டுத் தராவிட்டால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்று கண்கலங்கினார்.

x