கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நச்சு கழிவு மேலாண்மை நிறுவனத்தில் தீ விபத்து


கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் நச்சு கழிவு மேலாண்மை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

சுமார் 40 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்நிறுவன வளாகத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனக் கழிவுகள் மற்றும் தீபாவளி காலங்களில் வெடித்த பட்டாசுக் கழிவுகள் உள்ளிட்ட நச்சுக் கழிவுகள் டன் கணக்கில் சேகரித்து வைக்கப்பட்டு, அவற்றின் தன்மைக்கு ஏற்ப செயலிழக்கச் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இங்குள்ள ரசாயனக் கழிவு குவியலின் ஒரு பகுதிநேற்று பிற்பகல் 2 மணிக்கு திடீரெனத் தீப்பற்றியது. தொடர்ந்து மற்ற பகுதிகளுக்கும் தீ பரவியது. சுமார் 80 அடி உயரத்துக்கு எழுந்த நச்சுக் கரும்புகை சிப்காட் வளாகத்தை சுற்றியுள்ள பாப்பன்குப்பம், பாத்தப்பாளையம், சிந்தலகுப்பம், போடிரெட்டிகண்டிகை, கோபால்ரெட்டிகண்டிகை, பில்லாக்குப்பம் கிராமங்களைச் சூழ்ந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தகவலறிந்து கும்மிடிப்பூண்டி, சிப்காட், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரசாயன நுரை மற்றும் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், 5 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மண்ணைத் தூவினர். எனினும், இரவு 7 மணி வரை தீயைக் கட்டுப்படுத்த இயலவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x