சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் 6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டம்


மீனவர்களுடன் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ-க்கள்

ராமேசுவரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, ராமேசுவரத்தில் நேற்று 6 மாவட்ட மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி., எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற தமிழக மீனவர்கள் 74 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது 8 விசைப் படகுகள் மற்றும் 4 நாட்டுப் படகுகளைப் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக, இலங்கை அரசுக்கு, மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் வசமுள்ள 170-க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும். கச்சத்தீவு பகுதியில் இந்திய,இலங்கை மீனவர்கள் பிரச்சினை இன்றி மீன் பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் சார்பில் ராமேசுவரம் பேருந்து நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த, 1,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் வசந்த் (கன்னியாகுமரி), ராபர்ட் ப்ரூஸ் (நெல்லை), சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ, இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, நகராட்சித் தலைவர்கள் நாசர்கான் (ராமேசுவரம்), கார்மேகம் (ராமநாதபுரம்) மற்றும் மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

x