காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு: அரூர் அருகே கலசப்பாடி உள்ளிட்ட 9 கிராம மக்கள் பாதிப்பு


பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொடர் மழை காரணமாக சித்தேரி  வனப்பகுதியில் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கலசப்பாடி உள்ளிட்ட 9 மலைக்கிராம மக்கள் ஆபத்தான நிலையில் காட்டாறுகளை கடந்து செல்கின்றனர். (அடுத்த படம்) அஞ்செட்டி அருகே கோட்டையூர் பகுதியில்  நேற்று பெய்த கனமழை.

அரூர் / ஓசூர்: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கனமழை காரணமாக சித்தேரி மலையில் காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கலசப்பாடி உள்ளிட்ட 9 கிராம மக்கள் காட்டாற்றை கடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 4 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சித்தேரி மலைப் பகுதியில் உள்ள காட்டாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கி உள்ளது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் அருவிபோல தண்ணீர் கொட்டி வருகிறது. கடந்த ஆறு மாதமாக வறண்டு கிடந்த பல்வேறு சிற்றோடைகளிலும் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பாப்பி ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலைப்பகுதியில் சித்தேரி ஊராட்சி கலசப்பாடி பகுதியில் அரசநத்தம், ஆலமரத்து வலசு, கருக்கம்பட்டி, தரிசுகாடு, கோட்டக்காடு, பொய்க்குண்டல வலசு உள்ளிட்ட 9 கிராமங்கள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 4,500 மக்கள் இங்கு வசிக்கின்றனர். இப்பகுதியில் இதுவரை சாலை வசதி இல்லை.

இங்குள்ள மக்கள் மருத்துவம், கல்வி, அத்தியாவசிய தேவைகளுக்காக மலைப் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் வனப் பகுதி வழியாக வாச்சாத்தி கிராமம் வரை வந்து அங்கிருந்து வாகனங்களில் செல்ல வேண்டியுள்ளது. வனப்பகுதியில் இரண்டு இடங்களில் காட்டாறுகள் குறுக்கிடுகின்றன. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இரண்டு காட்டாறுகளிலும் தற்போது மழை நீர் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியுள்ளது.

இதனால் மலைக் கிராம மக்கள் சமவெளி பகுதிக்கு வர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றின் நடுவே கயிறு கட்டி அதனை பிடித்தவாறு கடக்கின்றனர். ஒரு சிலர் இருசக்கர வாகனங்களில் அபாயகரமான சூழலில் ஆற்றைக் கடந்து செல்கின்றனர். வெள்ள நீர் முற்றிலும் வடிந்தால் மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் மக்கள் கடந்து செல்ல முடியும்.

இது குறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, மலைக் கிராமங்களுக்கு செல்ல காட்டாறுகளில் பாலம் அமைத்து சாலை வசதி செய்து தர வேண்டும் எனக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் விரைந்து சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதி காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இதனால், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிக்கு உட்பட்ட அஞ்செட்டி, கோட்டையூர், உரிகம், உகினியம், தெப்பகுழி, நாட்றாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருண்ட வானிலை நிலவியது. மேலும், அவ்வப்போது குளிர்ந்த காற்று வீசிய நிலையில் சாரல் மழை பெய்தது.

பின்னர் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள வனப்பகுதி சிற்றோடைகள் மற்றும் காட்டாறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை நீர் காவிரி ஆற்றில் கலப்பதால் ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, ஓசூர் புறநகர்ப் பகுதிகளான தர்கா, சிப்காட், பத்தலபள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்ததால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி, மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

x