மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிசம்பருக்குள் புதுப்பிக்க நீதிமன்றம் உத்தரவு


கோப்புப்படம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புதுமண்டபத்தை டிசம்பர் மாதத்துக்குள் புதுப்பிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை புது மாகாளிபட்டியைச் சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கி.பி. 1628-ம் ஆண்டு முதல் 1635-ம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் மன்னரால் கருங்கற்களால் கட்டப்பட்ட புதுமண்டபம், மீனாட்சி அம்மன் கோயில் கிழக்குப் பகுதியில் உள்ளது. இங்கு 124 கலைநயமிக்க தூண்கள் உள்ளன. மேலும்,கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சுவாமி சிலைகளும் மண்டபத்தில் உள்ளன.

ஆரம்ப காலத்தில் புது மண்டபம் பகுதியில் ஆவணி மூலத் திருவிழா நடத்தப்பட்டு வந்தது. பின்னர், புது மண்டபத்தில் வணிகரீதியாக 300-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்தக் கடைகள் புது மண்டபத்திலிருந்து குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

எனவே, கலைநயமிக்க புது மண்டபத்தை தொல்லியல் ஆய்வாளர் சாந்தலிங்கம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், பழமைமாறாமல் மறு சீரமைப்பு செய்து,சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பார்வையிட திறக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

காலதாமதம் ஏற்படுவது ஏன்? இந்த மனுவை பொறுப்புதலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை. புது மண்டபத்தை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிர்வாக அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. அதன் பிறகும் புது மண்டபத்தை புதுப்பிக்க காலதாமதம் ஏற்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு, தொல்லியல் துறை தரப்பில், புது மண்டபத்தைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 6 மாதங்களுக்குள்பணிகள் நிறைவடைந்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் புது மண்டபத்தை புதுப்பிக்கும் பணிகளை வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

x