புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை: சாராயக் கடை உரிமத்தை சரண்டர் செய்ய உரிமையாளர்கள் திரண்டதால் சலசலப்பு


புதுச்சேரி: புதுச்சேரியில் விற்கப்படும் சாராயம் தமிழகத்தில் பிடிபட்டால் சாராயக்கடை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் போடப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்ததால், சாராயக்கடை உரிமங்களை சரண்டர் செய்வதாக சாராயக்கடை உரிமையாளர்கள் கலால் துறையிடம் இன்று கடிதம் அளித்துள்ளனர்.

புதுச்சேரியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாராயக் கடைகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. மாநில அரசின் மூலமாக இந்தக் கடைகளுக்கு சாராயம் விற்பனைக்கு கொடுக்கப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் கள்ளச்சாராயச் சம்பவங்களைத் தொடர்ந்து சாராயம் மொத்தமாக விற்பனை செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் மேற்கு எஸ்பி-யான வம்சிதரெட்டி சாராயக் கடை உரிமையாளர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

அப்போது, சாரயக்கடை உரிமையாளர்களை கூட்டத்தில் நிற்க வைத்து பேசியதுடன், புதுச்சேரி சாராயம் தமிழகத்துக்கு கடத்தப்பட்டால் கடை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார் எஸ்பி. இது சாராயக்கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எஸ்பி பேசியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சாராயக்கடை உரிமையாளர்கள், இது குறித்து கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸை இன்று சந்தித்து முறையிட்டனர்.

அப்போது "ஒவ்வொரு சாராயக்கடையையும் அரசுக்கு கிஸ்தி கட்டி, பல லட்சம் மாத வாடகை செலுத்தி ஏலம் எடுத்து நடத்தி வருகிறோம். இங்கு விற்பனை செய்யப்படும் சாராயம் தமிழகத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அவ்வாறு சாராயம் தமிழகத்தில் பிடிபட்டால் சாராயக்கடை உரிமையாளர்கள் மீது குண்டாஸ் வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும் எஸ்பி கூறியுள்ளார். அதனால் நாங்கள் அனைவரும் கடை உரிமங்களை சரண்டர் செய்து கடிதம் தர வந்துள்ளோம்" என்றனர். அதைத் தொடர்ந்து அதற்கான கடிதங்களை கையெழுத்திட்டு தந்தனர்.

அதற்கு கலால் துணை ஆணையர், "இவ்விஷயத்தை கண்காணிக்க வேண்டியது கலால் துறைதான். இது தொடர்பாக பேச கால அவகாசம் தேவை" என்று சொல்லி கடை உரிமையாளர்களை அனுப்பி வைத்தார்.

x