ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே, கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, வாய்க்கால் கரையில் அமர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி, ஈரோடு, திரூப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 2.5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது தொடர்பாக விவசாயிகளிடம் இருவேறு கருத்துகள் ஏற்பட்டதால், பணிகள் நிறுத்தப்பட்டன. இது தொடர்பாக அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டன. இப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலில் பழுதடைந்த பகுதிகளில் மட்டும் பணிகளை மேற்கொள்ள புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த பணிகளை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 15-ம் தேதி, கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, பெருந்துறை அருகேயுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த நீர்வளத்துறை அதிகாரிகள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து, ஆகஸ்ட் 15-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்று விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதுகுறித்து, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி, தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவர் சுதந்திரராசு ஆகியோர் நம்மிடம் பேசுகையில், “நீர்வளத்துறையின் புதிய அரசாணைப்படி, கீழ்பவானி வாய்க்காலில் பழுதடைந்த பகுதிகளில் மட்டும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இப்பணிகளை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் முடித்தால் மட்டுமே, 15-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். ஏற்கெனவே, பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவால், கீழ்பவானி பாசன கடைசி நனைப்பிற்கான நீர் கிடைக்கவில்லை. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
தற்போது பவானிசாகர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ள நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி நீர் திறப்பதற்கு முன்பாக, சீரமைப்பு பணிகளை முடிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதால், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. கால்வாய் சீரமைப்பு பணிகளின் நிலையை அறிந்து கொண்டு, ஆகஸ்ட் 2-ம் தேதி, பெருந்துறை கூரை பாளையம் கூரை மஹாலில் ஆலோசனை நடத்தவுள்ளோம். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.