தோல் கழிவுகளைப் பொருட்களாக மாற்றினால் 10 மடங்கு லாபம்: சிஎஸ்ஐஆர் இயக்குநர் தகவல்


சென்னை: கழிவுகளை தோல் பொருட்களாக மாற்றி பயன்படுத்தினால் 10 மடங்கு லாபம் கிடக்கும் என சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கே.ஜே.ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்ஐஆர் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் 75-வது ஆண்டை முன்னிட்டு 'தோல் பொருட்களை கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் சிஎஸ்ஐஆர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தோல் தொழில்நுட்ப கண்காட்சி, விற்பனை சென்னை அடையாறில் உள்ள அந்நிறுவன வளாகத்தில் இன்று தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், வேளாண் கழிவுகள், பழங்கள், மீன், கோழி, நெருப்பு கோழி, எருமை, ஆடு, மாடுகளின் தோல்கள், மூங்கில், சணல் உள்ளிட்டவை கொண்டு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தோல் பைகள், காலணிகள், சட்டைகள், பெல்ட், மணி பர்சுகள், கீச்செயின், செல்போன் கவர்கள் போன்றவை காட்சிபடுத்தப்பட்டிருந்தன. இதற்காக 10 அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக சிஎஸ்ஐஆர் இயக்குநர் கே.ஜே.ஸ்ரீராம் பேசும் போது, “ சிஎஸ்ஐஆரில் மொத்தமாக 37 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன. எங்களது நோக்கம் பல்கலைக் கழகங்களைப் போல ஆய்வு மட்டும் செய்யக்கூடாது. செய்யும் ஆய்வுகளை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான். ஆனால், நாங்கள் மேற்கொள்ளும் ஆய்வுகள் எங்கு போய் சேர வேண்டுமோ, அங்கு போய் சேர்வதில்லை. இந்த இடர்பாடுகளை இதுபோன்ற நிகழ்வுகள் வாயிலாக களைந்தால் எங்களின் ஆய்வுகள், தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகளுக்கு எளிதாக கொண்டு செல்லலாம். அதேபோல, அவர்களின் தேவைகளை புரிந்து கொண்டு நாங்களும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளலாம்” என்றார்.

மேலும், ”இப்போதைய இளம் தளமுறையினர் அறிவியல், ஆராய்ச்சிகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இது அமையும். உலகில் எங்குமே தோலுக்காக விலங்குகளை கொல்வது கிடையாது. மாமிச தேவை என்பது இருக்கும் வரை தோல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதனை பயன்படுத்தாவிட்டால் கழிவாகப் போய்விடும்.

அதனால் ஏற்படும் மாசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதனை தோல் பொருட்களாக மாற்றி பயன்படுத்துவதால் மாமிசத்தை விட, 10 மடங்கு லாபம் கிடைக்கிறது. இதுமட்டுமின்றி மருத்துவத் துறையிலும் நமது உடலுக்குத் தேவையான சிலவற்றை விலங்குகளின் தோலில் இருந்து பெறப்படுகின்றன. அடிப்படையில் ஒரு கழிவில் இருந்து எவ்வளவு ஆதாயம் எடுப்பது என்பதுதான் நம் குறிக்கோள்.”

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்கள் ரூ.200 கோடிக்கு தற்போது ஏற்றுமதியாகி வருகின்றன. மொத்தமாக அனைத்து தோல் பொருட்களும் ரூ.520 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.” என்றார். இந்நிகழ்வில் பாரதிய தேசிய நிறுவனத்தின் தலைவர் பி.ராமலிங்கம், சாய் கெமோயிஸ் நிறுவனத்தின் பங்குதாரர் சி.ராஜேஷ்வர ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x