ஜூலை 21ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்: இந்து முன்னணி அறிவிப்பு!


கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜூலை 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக இந்து முன்னணி அறிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கோயில்கள் மாநில அரசின் பிடியில் இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள அந்த கோயில்களுக்கு பல லட்சம் நிலங்கள், இடங்கள், வீடுகள் இருக்கின்றன. கோயில்களின் வருமானம், கோயில் சொத்துக்களை பாதுகாக்க, பராமரிக்க மட்டுமே தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டது இந்து சமய அறநிலையத்துறை. கடந்த 75 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோயில்களும், பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும், அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது.’

‘மேலும் இந்து கோயில்களின் சொத்துக்களை பொது பயன்பாட்டிற்கு என மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், சமத்துவபுரம், சமூக நல துறைக்கு என பலவகையில் பகல் கொள்ளையாக கோயில் சொத்துக்களை அரசே கபளீகரம் செய்துள்ளது. அதுமட்டுமல்ல கோயில் சொத்துக்களுக்கு உரிய இழப்பீடோ வாடகையோகூட தருவதில்லை. இந்து கோயில்களின் சொத்துக்களை அரசே திட்டமிட்டு சூறையாடுகிறது. மறுபுறம் ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போகின்றனர்.’

‘பிரம்மாண்டமான கோயிலை நிர்மாணித்த நமது முன்னோர்கள் அதனை நிர்வகிக்க, பாதுகாக்க பல கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை இறைவன் பேரில் எழுதி வைத்துள்ளனர். நீதிமன்றமும் கோயில் சொத்துக்கள் கோயில் பயன்பாட்டுக்காக தான். அதனை வேறு உபயோகத்திற்கு பயன்படுத்துவது கூடாது என கூறியே வந்துள்ளது. எனவே கோயில் சொத்துக்களை பாதுகாக்க தவறும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். கோயில் சொத்துக்களை பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி பக்தர்களை ஒன்றினைத்து வருகின்ற ஜூலை 21-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

x