புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார் எம்.அருணா!


புதுக்கோட்டை: சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டை மாவட்டத்துக்கு ஆட்சியராக பொறுப்பேற்பதில் பெருமை கொள்வதாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற எம்.அருணா தெரிவித்தார்.

1974ல் புதுக்கோட்டை புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டம் உருவாக்கப்பட்ட 50ம் ஆண்டில் மாவட்டத்தின் 43வது ஆட்சியராக நீலகிரியில் பணிபுரிந்த எம்.அருணா இன்று பொறுப்பேற்றார். அப்போது அவரை பல்வேறு துறை அதிகாரிகள் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் எம்.அருணா, “எனக்கு 3வது முறையாக மாவட்ட ஆட்சியராக பணிபுரிவதற்கு வாய்ப்பு வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமஸ்தானமாக இருந்த மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிய வாய்ப்பு கிடைத்திருப்பதைப் பெருமையாக கருதுகிறேன். அரசின் அத்தனை திட்டங்களும் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்கச் செய்வது தான் எனது முதல் பணியாக இருக்கும்.

ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி செய்யப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் எதுவாக இருந்தாலும் உரிய முறையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும்” என்றார்.

x