தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு!


சென்னை: சென்னை தேனாம்பேட்டை அம்மா உணவகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று, திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக அரசுத் தரப்பில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்துக்கு முன்னறிவிப்பின்றி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மதியம் திடீரெனச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்களிடம் உணவின் தரம், சுவை எவ்வாறு இருக்கிறது, உணவின் தரத்தை மேம்படுத்த வேண்டுமா என்பன போன்ற கேள்விகளை எழுப்பி, அவர்கள் கூறிய பதில்களை கேட்டறிந்தார். இதேபோல் அம்மா உணவகத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் காலை, மதிய வேளைகளில் என்னென்ன உணவுகள் வழங்கப்படுகின்றன, எவ்வளவு பேர் சாப்பிட வருகிறார்கள் என்பன போன்ற விவரங்களையும் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.

அதைத் தொடர்ந்து உணவு சமைக்கக் கூடிய சமையல் கூடப் பகுதிக்கு சென்று அங்குள்ள பாத்திரங்கள் போன்றவை தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் ஆய்வில் ஈடுபட்டார். ஆய்வின்போது, உடனிருந்த மாநகராட்சி அதிகாரிகளிடம், உணவை தொடர்ந்து தரமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். இதற்கிடையே அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

x