சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முன்பு இருந்த இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய சாக்ஷியா சட்டம் 2023 ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.
இந்த சட்டங்களுக்கு முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "எந்த விவாதமுமின்றி, இந்த சட்டங்கள் அவசர கதியில் நிறைவேற்றப்பட்டவை. சமஸ்கிருதத்தில் சட்டங்களை இயற்றியிருப்பது அரசியல் அமைப்பு சாசனத்துக்கு விரோதமானவை. எனவே புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியல் அமைப்பு சாசனத்துக்கு விரோதமானவை என அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விதமாக உள்ளன. இந்த சட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு சட்ட ஆணையத்துடன் ஆலோசித்திருக்க வேண்டும்" என தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.