கர்நாடகா அணைகளில் இருந்து நீர் திறப்பு 78,000 கன அடியாக அதிகரிப்பு!


ஒகேனக்கல்: கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர் திறப்பு 78 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதால் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை மற்றும் நுகு அணைகள் முழு கொள்ளளவை எட்டும் அளவிற்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ்., கபினி மற்றும் நுகு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கலுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகா அணைகளில் தொடர்ந்து நீர் வெளியேற்றம் அதிகரித்து வருவதால், ஒகேனக்கலுக்கு தண்ணீர் வரத்து வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது.

மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 55.12 அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

x