மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையே புதிய ரயில் சேவை இன்று தொடக்கம்


கோப்புப்படம்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி இடையிலான ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று (ஜூலை 19) தொடங்கிவைக்கிறார்.

இந்த ரயில் (எண். 16765) மேட்டுப்பாளையத்தில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்குப் புறப்பட்டு, அதிகாலை 4.20 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். மறுமார்க்கத்தில் (எண்.16766) தூத்துக்குடியில் இருந்து வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும்.

இந்த ரயில் கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல, கோவை-மேட்டுப்பாளையம் இடையே தற்போது தினமும் 5 முறை மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், 3 சேவைகள் போத்தனூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோவை-திருப்பதி இடையே வாரத்துக்கு 4 முறை இயக்கப்படும் ரயில், ஜூலை 21-ம் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்லும். புதிய ரயில் சேவைகளை மத்திய இணையமைச்சர் எல். முருகன், மேட்டுப்பாளையத்தில் இன்று தொடங்கிவைக்கிறார்.

x