எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது


கரூர்: கரூரில் நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார்.

கரூரில் 22 ஏக்கர் நிலத்தை மோசடியாகப் பதிவு செய்துள்ளதாக 7 பேர் மீது, மேலக்கரூர் சார் பதிவாளர் (பொ) முகமது அப்துல்காதர் புகார் அளித்தார். அதன்பேரில் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீஸார் 2 தினங்களுக்கு முன் கேரள மாநிலம் திருச்சூரில் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் பத்திரப் பதிவுக்கு உடந்தையாக இருந்ததாக, சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளராக இருந்த பிருத்விராஜ் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

இதனிடையே, சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளரான பிரகாஷ், தன்னை மிரட்டி, ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை பத்திரப் பதிவு செய்ததாக வாங்கல் போலீஸில் ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். இந்த வழக்கிலும் விஜயபாஸ்கரை கைது செய்வதற்காக, கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வாங்கல் போலீஸார் நேற்று ஆவணங்களை சமர்ப்பித்து, அனுமதி பெற்றனர். பின்னர், திருச்சி மத்திய சிறையில் இருக்கும் விஜயபாஸ்கரிடம் கைது உத்தரவை வழங்கி, அவரிடம் கையெழுத்து பெற்றனர்.

ஜாமீன் மனு தள்ளிவைப்பு: இதற்கிடையே, சிபிசிஐடி வழக்கில் ஜாமீன் கேட்டு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரத்குமார், விசாரணையை ஜூலை 22-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

x