தலைமைச் செயலர் தலைமையில் சட்டம்-ஒழுங்கு குறித்து ஆலோசனை


தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா

சென்னை: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குநிலவரம் குறித்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலதலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைசம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருவதுடன், இந்த சம்பவத்தில் தொடர்புள்ள பலரையும் கைது செய்து வருகின்றனர்.

அதிகாரிகள் மாற்றம்: இதுதவிர, மதுரையிலும் தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் விற்பவர்களும் தொடர்ந்துகைதாகி வருகினறனர்.

இந்நிலையில், தமிழக உள்துறை செயலராக இருந்த பி.அமுதா மாற்றப்பட்டு தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஐபிஎஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இந்தச்சூழலில், தமிழக சட்டம்-ஒழுங்கு குறித்துதலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல்ஆணையர் அருண், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன்தேவாசீர்வாதம், கடலோர பாதுகாப்புக் குழும ஏடிஜிபி சஞ்சய்குமார், ஆவடி காவல் ஆணையர் சங்கர், மாநில குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஜெயராமன், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோடக், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன், மாநில மனிதஉரிமைகள் ஆணைய ஐஜி சாமுண்டீஸ்வரி, உள்நாட்டு பாதுகாப்பு டிஐஜி மகேஷ், உளவுப்பிரிவு டிஐஜி பகலவன், க்யூ பிரிவு எஸ்பி சஷாங்க் சாய், சிறப்பு பிரிவு எஸ்பி கார்த்திக், சட்டம் ஒழுங்கு ஏஐஜி நாதா, சென்னை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் ராமமூர்த்தி உள்ளி்ட்டோர் பங்கேற்றனர்.

முதல் கூட்டம்: இதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம், கொலை கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருள் நடமாட்டம், உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்த முக்கிய ஆலோசனைகளை தலைமைச்செயலர் வழங்கியுள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில், இது முதல் ஆலோசனைக் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

x