தேர்தலில் தங்களை வென்றவர்களை எதிர்த்து ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன் வழக்கு


ஓபிஎஸ், நயினார் நாகேந்திரன், விஜயபிரபாகரன்

சென்னை: மக்களவைத் தேர்தலில் தங்களை வென்ற வேட்பாளர்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று ஒரே நேரத்தில் ஆஜராகி தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியிடம் 1.66 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

நெல்லை தொகுதியில் பாஜகசார்பில் போட்டியிட்டநயினார் நாகேந்திரன், காங்கிரஸ் வேட்பாளர்ராபர்ட் புரூஸிடம் 1.65 லட்சம்வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடையந்தார்.

இதேபோல அதிமுக கூட்டணி சார்பில் விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பறிகொடுத்தார்.

தேர்தல் முடிந்து 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குத் தொடர வேண்டும் என்ற நிலையில், ஓ.பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்து தேர்தல் வழக்குகளைத் தொடர்ந்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜலட்சுமி, சுப்புரத்தினம், ஆர்.வி.பாபு, நாகேந்திரன் ஆகியோரும், நயினார் நாகேந்திரன் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜும், விஜய பிரபாகரன் தரப்பில் வழக்கறிஞர் ஜி.சந்தோஷ்குமாரும் ஆஜராகி தேர்தல் மனுக்களை தாக்கல் செய்தனர்.

ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்கில், நவாஸ் கனியின் வருமான வரிகணக்கு அறிக்கைக்கும், சொத்துவிவரங்களுக்கும் இடையே குளறுபடிகள் உள்ளன. பல்வேறு விவரங்களை அவர் மறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் பரிசுப் பொருட்களை நவாஸ் கனி வழங்கியுள்ளார். எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதேபோல நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், நெல்லையில் நடைபெற்ற தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

விஜய பிரபாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில், விருதுநகர் தொகுதியில் தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படவில்லை. வாக்கு வித்தியாசம் மாறி, மாறி முன்னிலை பெற்ற நிலையில் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். எனவே தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையே, உயர் நீதிமன்றத்தில், செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, ‘எங்களை அதிமுகவில் இணைத்துக் கொள்ளும்படி பழனிசாமியிடம் யார் சொன்னது?. அவராகவே கேள்வி கேட்டுக்கொண்டு அவராகவே பதில் சொல்லி வருகிறார். அதிமுகவில் உள்ள அனைத்து மட்டத் தொண்டர்கள், தலைவர்களிடமும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். சசிகலாவின் பயணம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்’’ என்றார்.

x