3 ஆண்டுகளுக்குப் பிறகு ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம்: முதல்வருக்கு நேரில் நன்றி


புதுச்சேரி: மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஹஜ் பயணிகளுக்கு அரசு மானியம் அறிவிக்கப்பட்ட நிலையில், புனிதப் பயணம் சென்று வந்த ஹஜ் பயணிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்று புனித ஹஜ் பயணமாகும். சவுதி அரேபியா நாட்டில் உள்ள மக்காவிற்கு புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி சார்பில் இந்த ஆண்டு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹேவில் இருந்து 78 பேர் புனிதப் பயணம் மேற்கொண்டனர். ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு மானியம் வழங்கி வந்த நிலையில், புதுச்சேரியில் அது கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டியின் கோரிக்கையை ஏற்று, இந்த ஆண்டு அரசின் ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு அரசின் மானியம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இச்சூழலில் புனித ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி மாநிலத்திற்கு திரும்பிய இஸ்லாமியர்கள், மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமையில் முதல்வர் ரங்கசாமியை இன்று சட்டப்பேரவையில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

x