கனமழையால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


கரூர்: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அமராவதி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்பதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டத்திலுள்ள அமராவதி அணையின் நீர் மட்டம் இன்று காலை 10 மணி நிலவரப்படி 84.20 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 6,344 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படும். எனவே, அமராவதி ஆற்று கரையோரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு நீர் வளத்துறை அமராவதி வடி நில உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதொடர்பான தகவல் கரூர் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர்கள், எஸ்.பி. ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

x