திட்டப்பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சம்: அரியலூர் அதிமுக சேர்மன் தலைமையில் ஒன்றியக்குழு கூட்டம் புறக்கணிப்பு


அரியலூர்: அரியலூரில் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணிகள் ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி இன்று நடைபெறவிருந்த கவுன்சில் கூட்டத்தை தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கவுன்சிலர்களும் புறக்கணித்தனர்.

அரியலூர் ஊராட்சி ஒன்றியக் குழுவில் 17 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில், அதிமுகவைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி ஒன்றியக் குழு தலைவராகவும், தேமுதிகவைச் சேர்ந்த சரஸ்வதி துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்நிலையில், இன்று ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பங்கேற்க ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். ஆனால், கூட்ட அரங்குக்கு செல்லாமல், தலைவர் அறையிலேயே அமர்ந்து பேசிவிட்டு, கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி அலுவலகத்திலிருந்து அனைவரும் வெளியேறினர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக கவுன்சிலர்கள், “அரியலூர் பேருந்து நிலையத்துக்கு வெளியே ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள கடையை கவுன்சிலர்களுக்கு தெரியாமலேயே ஒருவருக்கு ஒதுக்கியுள்ளனர். வளர்ச்சித் திட்ட பணிகளை வார்டுகளுக்கு ஒதுக்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுகின்றனர். மேலும், எங்களிடம் சில தீர்மானங்களை எழுதி கையெழுத்து பெற்றபிறகு இடையிடையே இடைவெளிவிட்டு, அதில் சில தீர்மானங்களை அதிகாரிகள் அவர்களாகவே எழுதியுள்ளனர். எனவே, ஒன்றிய அலுவலக அதிகாரிகளைக் கண்டித்து கூட்டத்தை புறக்கணித்து வெளியேறி விட்டோம்” என்றனர்.

இதைத் தொடர்ந்து, மினிட் புத்தகத்தில் அண்மையில் போடப்பட்ட தீர்மான பக்கங்களை சில கவுன்சிலர்கள் கிழித்துச் சென்றனர். இதனால் இன்று நடைபெற இருந்த ஒன்றியக் குழுக் கூட்டம் நடைபெறவில்லை. இந்தப் புறக்கணிப்பில் ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி உள்பட அதிமுக கவுன்சிலர்கள் 11 பேர், தேமுதிகவைச் சேர்ந்த துணைத் தலைவர் சரஸ்வதி, பாமகவைச் சேர்ந்த 2 கவுன்சிலர்கள் பங்கேற்றனர். திமுக கவுன்சிலர்கள் மூவரும் கூட்டம் நடைபெறாததால் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே, மினிட் புத்தகத்தின் பக்கங்களை கவுன்சிலர்கள் கிழித்துச் சென்றது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட உள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தெரிவித்துள்ளார்.

x