தொடர் மழையால் போடிமெட்டு மலைச்சாலையில் விழுந்த பாறைகள்: அகற்றும் பணி தீவிரம்


போடி: தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலையில் பாறைகளும், மண்திட்டுக்களும் சரிந்து விழுந்ததை அடுத்து இவற்றை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. குறிப்பாக, மூணாறு, கொச்சின் செல்லும் பிரதான சாலையாக இது இருந்து வருகிறது. இந்த மலைப்பாதை போடி முந்தலில் இருந்து 20 கி.மீ. தூரம் வரை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது.

இச்சாலையின் ஒருபக்கம் பாறை, மண்திட்டுக்களுடனும், மறுபக்கம் சரிவுப் பள்ளத்தாக்குகளாகவும் அமைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் இந்த சாலையில் மண்சரிவு என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது. குறிப்பாக, தொடர்மழை காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில், இச்சாலையின் 13வது கொண்டை ஊசி வளைவில் பெரிய அளவிலான பாறைகள் இன்று காலையில் திடீரென சரிந்து விழுந்தன. இது குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்துச் சென்றனர். தொடர்ந்து பாறைகளை அகற்றும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

அதேபோல் 7வது கொண்டை ஊசி வளைவு உள்ளிட்ட பல்வேறு பகுதிளிலும் விழும் நிலையில் இருந்த பாறைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், ஆபத்தான இடங்களில் தொடர்ந்து மண்சரிவு ஏற்படாதவாறு மண்மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து நெஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “தொடர் மழையால் சிறு சிறு மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. அதனால் இந்த வழியே இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலைப் பணியாளர்கள் மூலம் இந்த மலைச்சாலையானது 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக மண் சரிவுகள் ஏற்பட்டால் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்த உரிய இயந்திரங்களும், கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றனர்.

x