வெம்பக்கோட்டை அகழாய்வு: வளையல் தயாரிக்கப் பயன்படும் சங்கு கண்டெடுப்பு!


சாத்தூர்: வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழ்வாய்வில் சங்கு வளையல்கள் தயாரிக்கப் பயன்படும் சங்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் கடந்த ஜுன் 18ம் தேதி 3ம் கட்ட அகழ்வாய்வு பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வில் தமிழர்களின் வாழ்வியல் தொடர்பான பல்வேறு பொருட்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது. இப்பொருட்கள், பண்டைய கால தமிழர் நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று சங்கு வளையல்கள் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான சங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியும் அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி, நாயக்கர் கால செம்பு நாணயம் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

3-ம் கட்ட அகழ்வாய்வில் இதற்கு முன்னதாக 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மனிதர்கள் பயன்படுத்திய சங்கு வளையல்கள் மற்றும் கழுத்தில் அணியும் சுடு மண்ணால் ஆன பதக்கம், கண்ணாடி மணிகள், கல்மணிகள் உள்ளிட்ட 650-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x