மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,520 கனஅடியாக அதிகரிப்பு


மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 21,520 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அதன்படி, அணைக்கு நேற்றுமுன்தினம் மாலை 16,577 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 20,910 கனஅடியாகவும், மாலை 21,520 கனஅடியாகவும் உயர்ந்தது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தண்ணீர் திறப்பைவிட நீர்வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 43.83 அடியாக இருந்த நிலையில் நேற்று மாலை 47.78 அடியாக உயர்ந்துள்ளது. அதேபோல, நீர் இருப்பு 14.14 டிஎம்சியில் இருந்து 16.44 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

ஒகேனக்கல்லில்... தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 21 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஏற்கெனவே ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகள், ஆறு உள்ளிட்ட இடங்களில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், வருவாய், வனம், காவல் துறையினர், காவிரிக் கரையோர பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

x