அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டும். என்று கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை மாற்றி அமைக்கும் வகையில் விரைவில் 7- வது ஊதியக்குழு அமைக்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், "கர்நாடக மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 7-வது ஊதியக்குழு அமைக்கப்பட உள்ளது.
அரசு ஊழியர்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் தினசரி ஒரு மணி நேரம் கூடுதலாக பணிபுரிய வேண்டும். உங்களின் குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை அரசு பார்த்துக் கொள்ளும். அரசு ஊழியர்கள் நேர்மையாக, அர்ப்பணிப்பு, விசுவாசத்துடன் பணியாற்றினால் மட்டுமே அரசு இயந்திரம் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
புதிய கர்நாடகத்தை உருவாக்கி அதன் மூலம் புதிய இந்தியாவை படைக்க இன்னும் நாம் அனைவரும் இணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியா ரூ.380 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் கர்நாடக மாநிலம் ரூ.80 லட்சம் கோடி பொருளாதார பங்களிப்பு செய்ய வேண்டும். முந்தைய ஊதிய குழு அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஊதிய குழுவை அமைக்கிறோம். வேறு எந்த மாநிலமும் இவ்வளவு விரைவாக ஊதிய குழுவை அமைக்கவில்லை அதன் அடிப்படையில் 7-வது ஊதிய குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.