மதுரை அல்லது திருச்சியில் நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு


விஜய்

சென்னை: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு இந்தாண்டு இறுதியில் திருச்சி அல்லது மதுரையில் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாக கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்ப்பது, கட்சி நிர்வாகிகளை நியமிப்பது, விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களை தொடர்ந்து சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது, தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது போன்ற பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், கட்சியின் கொள்கைகள், சின்னம், கொடியைமக்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழக வெற்றிக் கழகம்பிரம்மாண்டமாக மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தற்போது கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, ஒரு மாநில மாநாடு,4 மண்டல மாநாடு, மாவட்ட பொதுக் கூட்டங்களை நடத்துகின்றனர். முதலில் மாநில மாநாட்டை நடத்தி முடித்த பிறகு, அடுத்தடுத்து மண்டல மாநாடு, மாவட்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் 234 தொகுதிகளிலும் நடைபயணங்களை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டிருக்கிறார்.

மாநாட்டை பொறுத்தவரை மதுரையில் நடத்த இருப்பதாக முதலில் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது அந்த பட்டியலில் திருச்சியும் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து தீவிர ஆலோசனை நடந்து கொண்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகுவிரைவில் மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பாக நடிகர் விஜய் நடிக்கும் ‘தி கோட்’ திரைப்படம் ரிலீஸ் ஆன பிறகே மாநாடு நடைபெறும் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, தவெக மாநாடு இந்தாண்டு இறுதியில் நடத்தப்படலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். மண்டல மாநாடு, மாவட்ட பொது கூட்டங்களிலும் நடிகர் விஜய் பேசுவார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்

x