சென்னை: தியாகிகள் தினத்தையொட்டி, சங்கரலிங்கனார் உள்ளிட்ட மூவர் சிலைகளுக்கு தமிழக அரசு சார்பில் நேற்று மரியாதை செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் சேரன் குளத்தைச் சேர்ந்த தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொடிக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக்கை இறக்கிவிட்டு, இந்திய தேசியக் கொடியை கட்டிப் பறக்கவிட்ட மாவீரர் ஆவார்.
இதேபோன்று விருதுநகரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார், இன்றைய தமிழகத்தின் பெயர் சென்னை மாகாணம் என இருந்தபோது, அப்பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்றக் கோரி 79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தனது 58-வது வயதில் உயிர்துறந்தார். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தியாகி செண்பகராமன், தாய்நாட்டை வணங்கி ‘ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முதன்முதலில் முழங்கியவர்.
இந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் தியாகிகள் மணிமண்டபம், இம்மூவரின் உருவச் சிலைகள் ஆகியன மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டன.
மேலும் மூவரின் தொண்டையும் போற்றும் வகையில் தமிழக அரசின் சார்பில் ஜூலை 17-ம் தேதி தியாகிகள் தினமாக கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை, கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தியாகிகள் சிலை மற்றும் உருவப் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அவற்றுக்கு தமிழக அரசு சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் ஆர்.பிரியா, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் ஆர்யா என்கிற பாஷ்யம், செண்பகராமன், சங்கரலிங்கனார் ஆகியோரது சிலைகளுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படங்களுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.