மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதானுடன் ஆளுநர் ரவி சந்திப்பு


சென்னை: டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக கடந்த 15-ம் தேதி டெல்லி புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடியை கடந்த 16-ம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஆளுநர் ரவி நேற்று சந்தித்தார். அப்போது, தமிழக சட்டம் - ஒழுங்கு நிலவரம், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர், மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆளுநர் ரவி சந்தித்தார். அப்போது, ‘தமிழகத்துக்கு நீட்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசு ஏற்கெனவே நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்’ என்று சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்தும், தமிழகத்தின் பொதுவான உயர்கல்வி சூழல் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகள் குறித்து எக்ஸ் வலைதள பதிவில் ஆளுநர் ரவி தெரிவித்துள்ளதாவது: தமிழகத்தின் பாதுகாப்பு நிலைமை, அதுதொடர்பான சூழல்கள், மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம், பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பை மேற்கொண்டேன். தமிழக மக்களை பாதிக்கும் பிரச்சினைகள், அவர்களது நல்வாழ்வில் அவருக்கு ஆழ்ந்த பார்வையும், மிகுந்த அக்கறையும் உள்ளது.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, தமிழகத்தில் உயர்கல்வியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான வழிகள் மற்றும் முறைகள் குறித்து விவாதித்தேன். இவ்வாறு ஆளுநர் தெரிவித்து உள்ளார்.

x