தென்காசியில் ஓயாத மழை: அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்வு!


தென்காசி: ஓயாத மழை காரணமாக 132 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 109.50 அடியாக உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகள் மட்டுமின்றி மாவட்டம் எங்கும் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. குளிர்ந்த காற்றுடன் பெய்து வரும் சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் குண்டாறு அணையில் 12 மி.மீ., அடவிநயினார் அணையில் 4 மி.மீ., தென்காசியில் 3.20 மி.மீ., ராமநதி அணை, கருப்பாநதி அணையில் தலா 3 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது. ராமநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கெனவே நிரம்பிவிட்ட நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மற்ற அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

85 அடி உயரம் உள்ள கடனாநதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 69.30 அடியாக உள்ளது. 72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 49.87 அடியாக உள்ளது. 132 அடி உயரம் உள்ள அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 12 அடி உயர்ந்து 109.50 அடியாக உள்ளது.

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் இன்று 4-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடித்தது. ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்த பின்னர் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மதியம் பழைய குற்றாலம் அருவியிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டது.

x