இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு: செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


செங்கல்பட்டு: இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெறுவதையொட்டி, அதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று மாலை செங்கல்பட்டு ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

2023-2024-ம் கல்வி ஆண்டுக்காக 2,768 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு இடைநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வை 26,510 பேர் எழுத இருக்கின்றனர்.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுகள் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஹில்டா ஹியூக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் காலை 9:30 மணிமுதல் 1:30 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் தலா 236 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்நிலையில், இதற்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறையில் ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, காவல், தீயணைப்பு, கல்வி, மின் வாரியம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து எவ்வித இடையூறும் இல்லாமல் தேர்வினை செம்மையாக நடத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவேண்டும். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் சென்றுவர பேருந்து வசதி செய்துத் தரவேண்டும். பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர், கழிவறை வசதி மற்றும் சுற்றுப்புற தூய்மை வசதிகளை செய்துத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆடசியர், தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

x