தஞ்சாவூர்: டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்களை வாங்கிச் சென்று, சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர் சிஐடியு சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு டாஸ்மாக் ஊழியர் சிஐடியு சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மதியழகன் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஏ.ஜி. பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தொடக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் க.வீரையன் கோரிக்கை தொடர்பாக விளக்க உரையாற்றினார். இதில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, கட்டுமான சங்கத்தின் ஈ.டி.எஸ்.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஊழியர்களை மிரட்டி, மதுபாட்டில்களை வாங்கிச் சென்று சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பார் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிந்து, பார் உரிமத்தை ரத்துசெய்ய வேண்டும். பல ஆண்டுகளாக ஒரே டாஸ்மாக் கடையில் பணியாற்றுபவர்களை பணியிட மாறுதலும், சுழற்சி முறையில் இடமாற்றமும் செய்ய வேண்டும். காலிப்பாட்டில்களை சேகரிக்க தனி இடம் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், ஒப்பந்ததாரர் மூலம் டாஸ்மாக் கடைகளில் மதுபானப் பெட்டிகளை இறக்க ஒரு பெட்டிக்கு ரூ.8 கேட்பதாகவும், இந்தத் தொகையை வழங்காவிட்டால் இடமாற்றம் செய்து விடுவோம் என மிரட்டுவதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. அதேபோல பெட்டிகளை இறக்கும் போது ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை இனாமாக எடுத்துச் செல்லும் லோடுமேன்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களது விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் எனவும், அனுமதி பெற்ற மற்றும் அனுமதி பெறாத பார் உரிமையாளர்கள், டாஸ்மாக் கடைக்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டி, மதுபானங்களை எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், உரிமத் தொகை செலுத்தாததால் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட பார்களை அத்துமீறி திறந்து நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகமாக விற்பனை நடைபெறும் கடைகளில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் கண்டன முழக்கமிட்டனர்.