ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மாவட்ட தொழிலாளர் நலத்துறையின் தடுப்புப்படை நடத்திய அதிரடி ஆய்வின் போது, 2 குழந்தை தொழிலாளர்களும், 7 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் (அமலாக்கம்) க.மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘குழந்தை தொழிலாளர்கள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986ன்கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் நிறுவனங்களில் மாவட்டத் தடுப்புபடை (District Task Force) மூலம் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் 2 குழந்தைத் தொழிலாளர்களும், 7 வளரிளம் பருவத் தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை மேற்படி பணியில் ஈடுபடுத்திய நிறுவன உரிமையாளர்கள் மீது அபராதம் மற்றும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் நெசவுத்தொழில், வாகனம் பழுதுபார்க்கும் பணிமனைகள், உணவகங்கள், நடமாடும் உணவகங்கள், துரித உணவகங்கள், சாலையோர உணவகங்கள், கடைகள், வீடுகள், தங்கும் விடுதிகள், செங்கல் சூளைகள், இதர தொழில்களில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் மற்றும் 18 வயதிற்குட்பட்ட இளம் சிறார்களையும் பணிக்கு அமர்த்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இதையும் மீறி சிறுவர்களை பணியில் ஈடுபடுத்தும் நிறுவனங்கள் மீது ரூ.20,000 முதல் ரூ. 50,000 வரை அபதாரமும், 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை கூடிய சிறை தண்டனையும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.