ராமநாதபுரம் கடற்பகுதியில் சூறைக்காற்று: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை!


ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் சூறைக்காற்று வீசும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, இன்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நிலப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஜூலை 19ம் தேதி உருவாக வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, பாக் நீரிணை மற்றும் குமரிக் கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையிலும் கடலுக்குச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், அனுமதி டோக்கனும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் தனுஷ்கோடியிலிருந்து, பாம்பன், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம், மூக்கையூர் வரையிலுமான மன்னார் வளைகுடா பகுதியிலும், ராமேஸ்வரம், மண்டபம், தேவிப்பட்டினம், எஸ்.பி. பட்டினம் வரையிலுமான பாக் நீரிணை கடற்பகுதியிலும், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லாமல் ஆழம் குறைந்த பகுதிகளில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

x