ஒகேனக்கலுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு: பரிசல் இயக்க தடை விதிப்பு!


தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து நீர் திறப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 22 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று காலை நிலவரப்படி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி நீரும், கே.ஆர்.எஸ் அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி நீரும், நுகு அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் 44 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர் விரைவில் தமிழக எல்லையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 21 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று அதிகரித்து 22,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதே போல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள முக்கிய அணைகளில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 2வது நாளாக பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வருவாய் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி ஆழியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையில் நீர்மட்டம் 95.80 அடியாக உள்ளது.

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கிவரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்துள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 27.2 அடி அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 38.6 அடியாக உள்ளது.

x