உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்: குடியரசு தலைவர் உத்தரவு


சென்னை: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த மணிப்பூரைச் சேர்ந்த என்.கோட்டீஸ்வர் சிங் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்திருந்தது.

இந்த பரிந்துரையை ஏற்று இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படிஉச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.மகாதேவன், விரைவில் உச்ச நீதிமன்றத்தில் பொறுப்பேற்கவுள்ளார். மணிப்பூரைச் சேர்ந்த நீதிபதி என். கோட்டீஸ்வர் சிங் மணிப்பூரில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு செல்லும் முதல் நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டி.கிருஷ்ணகுமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி கே.ஆர்.ராமை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x