கடன் சுமையை குறைக்கவே கட்டணம் உயர்வு: தமிழக மின் வாரியம் விளக்கம்


சென்னை: மின் வாரியத்தின் கடன் சுமையை குறைக்கவும், மத்திய அரசிடம் இருந்து நிதியை பெறுவதற்காகவுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் மின் கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து மின் வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011-12-ம் ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதி இழப்பு 2021-ம் ஆண்டு ரூ.1.13 லட்சம் கோடியாக உயர்ந்தது. தமிழ்நாடு மின் வாரியத்தின் நிதி இழப்பை 2021-22-ம்ஆண்டிலிருந்து 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

ஆனால், முந்தைய ஆட்சிக் காலத்தில் எவ்வித உறுதியும் வழங்காத காரணத்தால், தமிழ்நாடு மின் வாரியம்நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது.

இதன் விளைவாக, 2011-12-ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்துக்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன்தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து2021-22-ம் ஆண்டு வரை ரூ.1.59 லட்சம் கோடியாக மாறியது.

இதன் விளைவாக, கடந்த 2011-12-ம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டி 259சதவீதம் அதிகரித்து 2020-21-ம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது.

இவ்வாறு அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடுசெய்ய அப்போது மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதன் பின்னர், அதிகமான மின் கட்டண உயர்வினால்மின் நுகர்வோருக்கு ஏற்படக் கூடிய சுமையைக் கருத்தில்கொண்டு, நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டுதோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது

மத்திய அரசின் மின் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, விநியோக முறையை வலுப்படுத்தும் ‘ஆர்டிஎஸ்எஸ்’ திட்டத்தின் கீழ்,மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக ஆண்டுதோறும் மின் கட்டணம்திருத்தம் செய்வது முன் நிபந்தனையாகும். அந்த வகையில், 2022-23 நிதிஆண்டுக்கான மின் கட்டண உயர்வானது, 2022 ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பதில், 2022 செப்.10-ம் தேதி முதல் சுமார் 7 மாதத்துக்கு மட்டுமே உயர்த்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின்கட்டண வீத ஆணையின்படி, கடந்த 2023 ஜுலை 1-ம் தேதி முதல் நுகர்வோர் விலை குறியீடு எண் அடிப்படையில், அனைத்து மின் இணைப்புகளுக்கும் உயர்த்தப்பட வேண்டிய 4.7 சதவீத மின் கட்டண உயர்வுக்கு எதிராக, மின் நுகர்வோரின் நலனைக்கருத்தில் கொண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான இந்த 2.18 சதவீத உயர்வையும் மின் மானியம் மூலம் தமிழக அரசே முழுவதுமாக ஏற்றுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளின்படி, 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தவழி இருந்தும், சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. இந்தஆண்டு ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை, 2023 ஏப்ரல் மாதத்தின் விலைகுறியீட்டு எண் 178.1 மற்றும் 2024 ஏப்ரல்மாதத்தின் விலை குறியீட்டு எண் 186.7ஆகியவற்றின் நுகர்வோர் விலைக்குறியீட்டு எண்களின்படி கணக்கிட்டால், 4.83 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும்.

இதன்படி, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கட்டணத்தை மறுசீரமைப்பதின் மூலம் பொதுமக்களுக்கும். தொழில்முனைவோருக்கும் சிறிய அளவே கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x