ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் முதல் வலுக்கும் காவிரி பிரச்சினை வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


மின் கட்டண உயர்வு ஏன்? - 2011-12-ம் ஆண்டில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகத்திற்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து 2021-22 வரை ரூ.1,59,823 கோடியாக மாறியது. இதன் விளைவாக, கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.4,588 கோடியாக இருந்த கடன்களின் மீதான வட்டியானது 259% அதிகரித்து 2020-21-ஆம் ஆண்டில் ரூ.16,511 கோடியாக அதிகரித்தது. அதிகரித்துவரும் நிதி இழப்பை ஈடு செய்ய அப்போதைய மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மின் உற்பத்தியைப் பெருக்காமல், விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் அளவை அதிகரித்துக் கொண்டே இருந்தால், மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வுக்குத் தான் வழிவகுக்கும். இந்த அடிப்படை நிர்வாக அறிவு கூட இல்லாத, முட்டாள்தனமான மாடலாக இருக்கிறது திமுகவின் திராவிட மாடல் அரசு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

மின் கட்டண உயர்வு: பாமக, அதிமுக போராட்டம் அறிவிப்பு: மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 19-ம் தேதி சென்னையில் பாமக சார்பில் அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெறும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதனிடையே, திமுக அரசு பதவியேற்ற கடந்த 3 ஆண்டுகளில், மூன்றாவது முறையாக மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், ரேஷன் கடைகளில் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிப்பதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 23-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

மின் கட்டண உயர்வுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து, நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை வெகுவாக குறைக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கட்டண கணக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். புதிய மின் உற்பத்தி திட்டங்களை அரசே செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்வதுதான் தமிழகத்துக்கு தேவையான மின் கொள்கையாகும், என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழகம் முழுவதும் 65 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை மாநாகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், சென்னை மாநாகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரி டி.மோகன், உணவுப்பொருள் வழங்கல் ஆணையராகவும், மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையர் ஜெ.ஜெயகாந்தன், ஜவுளித்துறை ஆணையராகவும், அப்பதவியில் இருந்த எம். வள்ளலார் தமிழ்நாடு கடல்சார் வாரிய தலைமை செயல் அதிகாரியகவும், கடலூர் ஆட்சியர் ஏ.அருண் தம்புராஜ் தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனராகவும், அப்பதவியில் இருந்த எம்.கோவிந்தராவ், மின்னாளுமை முகமை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது: ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலமோசடி புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமிஅ கேரளாவில் கைது செய்யப்பட்டு கரூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

நாதக நிர்வாகி கொலை - சீமான் கண்டனம்: மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகியான பாலசுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை காலை ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலைக்கு குடும்ப பிரச்சினை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், “அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்குமே பாதுகாப்பு இல்லையென்றால், எளிய மக்களுக்கு இம்மாநிலத்தில் என்ன பாதுகாப்பு இருக்கப்போகிறது? இதென்ன தமிழ்நாடா? இல்லை! உத்தரப் பிரதேசமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாபர் சாதிக்கை காவலில் விசாரிக்க அனுமதி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக்கை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசு அதிரடி! - கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50 சதவீத நிர்வாக பணிகளிலும், 75 சதவீதம் நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காவிரி பிரச்சினை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற ஆணையின்படி தமிழகம் பெற வேண்டிய நீரை உடனடியாக பெறுவதற்கு தேவைப்படின், உச்ச நீதிமன்றத்தை நாடி அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்படும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், செயலர் மணிவாசகம், சட்டதுறை வல்லுநர்கள், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, வில்சன் எம்.பி., அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், காங்கிரஸ் சார்பில் மாநிலத் தலைவர் கு.செல்வபெருந்தகை, பாமக சார்பில் ஜி.கே.மணி, சதாசிவம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராமச்சந்திரன், மு.வீரபாண்டியன், விசிக சார்பில் தொல்.திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்.எச்ஜாவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் தி.வேல்முருகன், கொமதேக சார்பில் ஈ.ஆர். ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசுக்கு டி.கே.சிவகுமார் கோரிக்கை: தமிழ்நாட்டின் தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தமிழ்நாட்டிடம் என்னுடைய ஒரே கோரிக்கை, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இந்த அணையால் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு இரண்டும் சரிசமமாக பலனடையும். இரண்டு மாநிலங்களின் செழிப்புக்கும் இந்த நடவடிக்கை அவசியம்.

எனவே, அனைத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, மேகேதாட்டு நீர்தேக்க அணையின் கட்டுமானப் பணிகளுக்கு தமிழ்நாடு பச்சைக் கொடி காட்டி, பிராந்தியத்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்கு பங்களிக்கும் என்று நம்புகிறேன் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

x