கலைஞர் கனவு இல்லம் திட்டம் - அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முக்கிய தகவல்!


விருதுநகர்: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு விரைவில் தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் ‘மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்’ இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு 71 பயனாளிகளுக்கு ரூ.13.80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் வழங்கிய மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அப்போது அமைச்சர் பேசுகையில், “இந்த முகாமில் 14 துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களும் உங்களைத் தேடி வந்திருக்கிறார்கள். நீங்கள் கொடுக்கும் தகுதியான அனைத்து மனுவிற்கும் முறையான தீர்வுகள் வழங்கப்படும். மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் சுமார் 1.15 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் விண்ணப்பித்தவர்களில் தகுதியான 1.48 லட்சம் பயனாளிகளுக்கும் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தாலும் அவர்களுக்கும் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

மேலும், “ ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் மூலம் சுமார் ஒரு லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டத்திற்கான தகுதியான பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்” என்றார்.

x