தமிழகத்தில் மட்டும் தான் 20,000 அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன: அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்


விருதுநகர்: நாட்டில் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் தான் 20 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் விருதுநகர் மண்டலத்திற்கு ரூ.12.18 கோடியில் புதிதாக வழங்கப்பட்டுள்ள 29 பேருந்துகள் சேவை தொடங்க விழா விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமை வகித்தார். எம்எல்ஏ-க்கள் சீனிவாசன் (விருதுநகர்), ரகுராமன் (சாத்தூர்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), சிவகாசி மேயர் சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டு புதிய 29 அரசுப் பேருந்துகள் சேவையை கொடியசைத்துத் தொடங்கிவைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேசுகையில், “விருதுநகர் மண்டலத்திற்கு கடந்த மார்ச் 4-ம் தேதி புதிதாக 10 பேருந்துகளும், தொடர்ந்து படிப்படியாக 26 புதிய பேருந்துகளும் என மொத்தம் 36 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 25 புறநகர் பேருந்துகள், 4 நகரப் பேருந்துகள் என 29 புதிய பேருந்துகள் ரூ.12.18 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மாநில அரசிடம் இத்தனை பேருந்துகள் கிடையாது. தமிழகத்தில் மட்டும்தான் 20 ஆயிரம் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகத்தை மென்மேலும் மேம்படுத்துவதற்கான பணிகளை அரசு தொடர்ந்து செயல்படுத்தும்” என்று அவர் கூறினார்

x