ஓபிஎஸ் கொடுத்த வெள்ளிக்கவசம்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?


“அதிமுகவுக்கு நான்தான் ஒருங்கிணைப்பாளர்” என்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திய பின்பு அதிரடியாக அறிவித்த ஓ.பன்னீர்செல்வம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிக்கும் வகையில் வெள்ளிக்கவசமும் வழங்கியிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் சாத்த தங்கக்கவசம் வழங்கியிருந்தார். கோயில் அறங்காவலருக்கு இதை யார் வழங்குவது எனும் விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. இந்நிலையில் “நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர். இந்த வெள்ளிக்கவசம் அதிமுக சார்பிலேயே வழங்கப்படுகிறது” இன்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக் கவசமும், வெள்ளியிலான ருத்திராட்ச மாலையும் வழங்கினார். இவற்றின் மொத்த எடை 10.44 கிலோ ஆகும். இதன் இப்போதைய சந்தை மதிப்பு 9 லட்சத்து 11 ஆயிரத்து 745 ரூபாய் ஆகும்.

அதிமுக சார்பில் ஜெயலலிதா வழங்கிய தங்கக்கவசம் குருபூஜை பயன்பாடு போக இதர நேரங்களில் வங்கிகளில் வைக்கும் முறையிலேயே வழங்கப்பட்டது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் இப்போது வழங்கியுள்ள வெள்ளிக்கவசம் தேவர் நினைவிடத்தின் அறங்காவலர் காந்தி மீனாள் வசமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் தென்மாவட்டங்களில் தன் சமூகத்தினர் மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

x