பொது சேவை பெறும் உரிமை சட்டம் வேண்டும்: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: தமிழகத்தில் பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: மக்களுக்கு சாதிச் சான்று, பிறப்பு, இறப்பு, வசிப்பிடம், வருவாய், வாரிசு சான்றிதழ்கள், பட்டா மாறுதல், திருமணப் பதிவு, குடும்ப அட்டை, மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்பு ஆகிய சேவைகளை வழங்க வேண்டியது வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை.

ஆனால், தவிர்க்கக் கூடாத இந்த சேவைகளைக் கூட தமிழக அரசின் துறைகள் சரியான நேரத்தில் வழங்குவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதற்காக ரூ.500 முதல் ரூ.10,000 வரை லஞ்சம் வழங்க வேண்டியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பல சான்றிதழ்களை பொது சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தாலும் கூட அரசு அலுவலகங்களுக்கு சென்று லஞ்சம் தர வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். லஞ்சம் கொடுத்தால் தான் சேவை கிடைக்கும் என்பது அரசுக்கு அவமானம்.

மக்களுக்கு அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவதுதான்.

இச்சட்டம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால், தமிழக அரசு இச்சட்டத்தை நிறைவேற்ற மறுக்கிறது. ஆனால் இந்த சட்டத்தை கொண்டுவருவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருந்தது. ஆனால், எதுவும் நடக்கவில்லை.

மக்களுக்கு அனைத்து சேவைகளும் குறித்த காலத்தில் கிடைக்க பேரவை கூட்டத் தொடரில் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.

x