கோவை சிலிண்டர் விபத்து சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை தீபாவளி முடிந்து மூன்று நாட்களாகியும் தமிழக அரசு மயக்கத்திலே இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள், சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர். அதற்கான அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " அக். 30-ம் தேதி தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது" என்றார். வழக்கமாக எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்வாரே என்ற கேள்விக்கு, "கடந்த காலத்தில் பல முறை எடப்பாடி பழனிசாமி நந்தனத்தில் உள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவித்துள்ளார்" என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், " கோவை சிலிண்டர் விபத்து சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என தெரியவில்லை தீபாவளி முடிந்து மூன்று நாட்களாகியும் தமிழக அரசு மயக்கத்திலேயே இருக்கிறது. மழை நீர் வடிகால்வாயில் விழுந்து தனியார் தொலைக்காட்சி ஊழியர் பலியாகி உள்ளார். எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் பணிகளை மேற்கொண்டு வருவதே அவரது மரணத்திற்கு காரணம், அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், மாநகராட்சி பொறியாளர்கள், மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் மரணமடைந்த ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழக மாணவர்கள் ஆந்திராவில் தாக்கப்பட்டது தொடர்பாக அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. தமிழர்கள் எங்கு தாக்கப்பட்டாலும் வாய் திறக்காத ஒரே அரசு திமுக அரசு தான்" என்று கூறினார்.